ஸ்ரீமுஷ்ணம் அருகே: அ.ம.மு.க. நிர்வாகி மனைவி, வேன் மோதி பலி


ஸ்ரீமுஷ்ணம் அருகே: அ.ம.மு.க. நிர்வாகி மனைவி, வேன் மோதி பலி
x
தினத்தந்தி 6 Dec 2018 10:30 PM GMT (Updated: 6 Dec 2018 11:27 PM GMT)

ஸ்ரீமுஷ்ணம் அருகே வேன் மோதியதில் அ.ம.மு.க. நிர்வாகி மனைவி பலியானார்.

ஸ்ரீமுஷ்ணம்,

ஸ்ரீமுஷ்ணம் அருகே ஸ்ரீநெடுஞ்சேரி ரோட்டுத்தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன். அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தில் மாவட்ட விவசாய அணி செயலாளராக உள்ளார். இவரது மனைவி லலிதா(வயது 48). இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை லலிதா நாச்சியார்பேட்டை ஸ்ரீநெடுஞ்சேரி சாலையில் உள்ள வீரன் கோயில் அருகில் மாடுகளை மேய்த்துக்கொண்டிருந்தார். அப்போது நாச்சியார்பேட்டையில் இருந்து ஸ்ரீநெடுஞ்சேரி நோக்கி சென்ற வேன் ஒன்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி லலிதா மீது மோதி, சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.

இதில் வேனின் அடியில் சிக்கிய லலிதாவை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஸ்ரீமுஷ்ணம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் லலிதா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ராஜேந்திரன் ஸ்ரீமுஷ்ணம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story