பாபர் மசூதி இடிப்பு தினம்: தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தினர் ஆர்ப்பாட்டம்


பாபர் மசூதி இடிப்பு தினம்: தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 6 Dec 2018 10:00 PM GMT (Updated: 6 Dec 2018 11:27 PM GMT)

கடலூரில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

கடலூர்,

கடந்த 1992-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 6-ந்தேதி அயோத்தியில் இருந்த பாபர் மசூதி சங்பரிவார் அமைப்புகளால் இடிக்கப்பட்டது. இடிக்கப்பட்ட பாபர் மசூதியை மீண்டும் கட்டித்தரக்கோரியும், பாபர் மசூதியை இடித்தவர்களுக்கு உடனடியாக தண்டனை வழங்க வலியுறுத்தியும் ஒவ்வொரு ஆண்டும் பாபர் மசூதி இடிப்பு தினமான டிசம்பர் 6-ந்தேதி அன்று முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள்.அதன்படி பாபர் மசூதி இடிப்பு தினமான நேற்று தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் கடலூர் தலைமை தபால் நிலையம் அருகில் கருப்பு சட்டை மற்றும் கருப்பு பட்டை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு த.மு.மு.க. கடலூர் வடக்கு மாவட்ட தலைவர் ஷேக்தாவூத் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஜாகிர் உசேன் வரவேற்று பேசினார். மனிதநேய மக்கள் கட்சி மாநில துணைப்பொதுச்செயலாளர் முகம்மது கவுஸ் கண்டன உரையாற்றினார். முன்னதாக தி.மு.க. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இள.புகழேந்தி, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் சந்திரசேகர், இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் மணிவாசகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி நாடாளுமன்ற தொகுதி செயலாளர் தாமரைசெல்வன், மனித நேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் தமீம் அன்சாரி மற்றும் நிர்வாகிகள், பெண்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். அனைவரும், கோரிக்கையை வலியுறத்தி ஆர்ப்பாட்டம் செய்து விட்டு கலைந்து சென்றனர். 

Next Story