தேன்கனிக்கோட்டை அருகே பரபரப்பு: மாடுகள், ஆட்டை மிதித்து கொன்ற காட்டு யானை


தேன்கனிக்கோட்டை அருகே பரபரப்பு: மாடுகள், ஆட்டை மிதித்து கொன்ற காட்டு யானை
x
தினத்தந்தி 8 Dec 2018 4:30 AM IST (Updated: 8 Dec 2018 12:12 AM IST)
t-max-icont-min-icon

தேன்கனிக்கோட்டை அருகே 2 மாடுகள், ஒரு ஆட்டை காட்டு யானை மிதித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தேன்கனிக்கோட்டை,

கர்நாடக மாநிலம் பன்னார்கட்டா வனப்பகுதியில் இருந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்கு 75-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் வந்தன. இந்த யானைகள் இரவு நேரத்தில் பல்வேறு குழுக்களாக பிரிந்து அருகில் உள்ள கிராமங்களுக்குள் புகுந்து அங்கு பயிரிடப்பட்டுள்ள விவசாய பயிர்களை தின்றும், கால்களால் மிதித்தும் சேதப்படுத்தி வருவது தொடர் கதையாக உள்ளது.

இந்த நிலையில் நேற்று மதியம் நொகனூர் காப்புக்காட்டில் இருந்து ஒரு காட்டு யானை தேன்கனிக்கோட்டை அருகே உள்ள பண்டையூர் கிராமத்திற்குள் புகுந்தது. யானை ஊருக்குள் புகுந்ததை அறிந்த அப்பகுதி மக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.

ஆக்ரோஷமாக சுற்றிய காட்டு யானை அப்பகுதியில் மேய்ந்து கொண்டிருந்த பண்டையூரை சேர்ந்த நாராயணப்பா என்பவர் வளர்த்து வந்த பசுமாட்டை துதிக்கையால் தூக்கி வீசியது. மேலும் கால்களால் அந்த மாட்டை மிதித்தது. இதில் குடல் வெளியே சரிந்து அந்த பசுமாடு பரிதாபமாக செத்தது.

மேலும் அந்த காட்டு யானை அருகே உள்ள கம்மந்தூருக்குள் புகுந்தது. அங்கு சந்தோஷ் என்பவர் வளர்த்து வந்த ஒரு பசுமாட்டையும், சின்னபூதுக்கோட்டை கிராமத்தை சேர்ந்த அப்பண்ணா என்பவர் வளர்த்து வந்த ஆட்டையும் துதிக்கையால் தூக்கி வீசி, கால்களால் மிதித்து கொன்றது.

இது குறித்து தேன்கனிக்கோட்டை வனத்துறையினருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வனச்சரகர் வெங்கடாசலம், வனக்காவலர் ஆறுமுகம் மற்றும் வனவர்கள் சம்பவ இடத்திற்கு சென்றனர். இதற்கிடையே காட்டு யானை மீண்டும் வனப்பகுதிக்குள் சென்று விட்டது.

தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் உள்ள யானைகளை கர்நாடக வனப்பகுதிக்கு விரட்டியடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதன்பேரில் யானைகளை கர்நாடக வனப்பகுதிக்கு விரட்டும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பொதுமக்கள் யாரும் கால்நடைகளை மேய்க்க வனப்பகுதிக்குள் செல்ல வேண்டாம் எனவும், வீடுகளின் முன்பு இரவு நேரத்தில் மின்விளக்குகளை எரிய விட வேண்டும் எனவும் வனத்துறையினர் கேட்டுகொண்டனர். இந்த சம்பவம் தேன்கனிக்கோட்டை அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story