தஞ்சையில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் கடத்தல்; முன்னாள் காதலன் கைது


தஞ்சையில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் கடத்தல்; முன்னாள் காதலன் கைது
x
தினத்தந்தி 8 Dec 2018 3:30 AM IST (Updated: 8 Dec 2018 12:13 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சையில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண்ணை கடத்திய முன்னாள் காதலனை போலீசார் கைது செய்தனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலை பகுதியை சேர்ந்த 28 வயது பெண்ணுக்கு திருமண நிச்சயதார்த்தம் முடிந்து அடுத்த மாதம் (ஜனவரி) திருமணம் நடைபெற உள்ளது. நேற்று அதிகாலை அந்த பெண் கோலம் போடுவதற்காக வீட்டிற்கு வெளியே வந்தார். அப்போது அவரை சிலர் தூக்கிச்சென்று மோட்டார் சைக்கிளில் ஏறி கடத்தி செல்ல முயன்றனர்.

உடனே அந்த பெண் அவர்களிடம் இருந்து விடுபட முயன்றார். முடியாததால் சத்தம் போட்டார். அவரது சத்தம் கேட்டு அவரது தம்பி, வீட்டில் இருந்து வெளியே வந்து தனது அக்காவை கடத்தி செல்ல முயன்றதை பார்த்து காப்பாற்ற முயன்றார். ஆனால் அவரையும் அந்த மர்ம நபர்கள் தாக்கி விட்டு அந்த பெண்ணை கடத்தி சென்று விட்டனர்.

இது தொடர்பாக அந்த பெண்ணின் தம்பி, தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். வல்லம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் அறிவுரையின்படி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயமோகன், சப்–இன்ஸ்பெக்டர் சக்திவேல் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

போலீசாரின் தீவிர விசாரணையில் மானோஜிப்பட்டியை சேர்ந்த உதயகுமார்(30) என்பவர் தனது நண்பர்களுடன் அந்த பெண்ணை கடத்தி சென்றது தெரிய வந்தது. அவரது செல்போன் எண்ணை வைத்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர், மருத்துவக்கல்லூரி சாலை சரபோஜி நகரில் இருப்பது தெரிய வந்தது. உடனே போலீசார் அங்கு விரைந்து சென்று அந்த பகுதியில் உள்ள ஒவ்வொரு வீடாக சென்று விசாரணை நடத்தினர். அப்போது அங்கு ஒரு வீடு மட்டும் பூட்டி கிடந்தது.

இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், அந்த வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அங்கு உதயகுமாரும், அந்த பெண்ணும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த பெண்ணை மீட்ட போலீசார், உதயகுமாரை கைது செய்து தமிழ்ப்பல்கலைக்கழக போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரிடம் விசாரித்தபோது, இருவரும் சில ஆண்டுகள் காதலித்து வந்ததும், பின்னர் கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்து விட்டதும், தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என அந்த பெண்ணை உதயகுமார் மிரட்டியதும் தெரிய வந்தது.

தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருவதுடன் தலைமறைவாக உள்ள மற்ற 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

இது குறித்து போலீசார் கூறும்போது, மீட்கப்பட்ட பெண்ணை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அடுத்தகட்ட நடவடிக்கையை மேற்கொள்வோம் என்றனர். கடத்தப்பட்ட 3 மணிநேரத்தில் பெண்ணை மீட்ட போலீசாரை, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் வெகுவாக பாராட்டினார்.


Next Story