முத்துப்பேட்டை அருகே நிவாரணம் வழங்கக்கோரி 2 கிராமமக்கள் சாலைமறியல்


முத்துப்பேட்டை அருகே நிவாரணம் வழங்கக்கோரி 2 கிராமமக்கள் சாலைமறியல்
x
தினத்தந்தி 9 Dec 2018 4:15 AM IST (Updated: 8 Dec 2018 10:42 PM IST)
t-max-icont-min-icon

முத்துப்பேட்டை அருகே நிவாரணம் வழங்கக்கோரி 2 கிராமமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

முத்துப்பேட்டை,


முத்துப்பேட்டை அருகே உள்ள ஆலங்காடு மற்றும் உப்பூர் பகுதியில் கஜா புயல் பாதிப்படைந்து 23 நாட்கள் கடந்தும் இன்னும் மின் சீரமைப்பு பணியை தொடங்காத மின்சார வாரியத்தை கண்டித்தும், ஆலங்காடு கிராமத்தில் 987 குடும்ப அட்டைகளுக்கு பதில் 210 குடும்ப அட்டைகளுக்கும், உப்பூர் கிராமத்தில் 920 குடும்ப அட்டைகளுக்கு பதில் 250 குடும்ப அட்டைகளுக்கும் பாகுபாடு பார்த்து நிவாரணம் வழங்க இருப்பதை கண்டித்தும், அனைவருக்கும் பாரபட்சமின்றி நிவாரணம் வழங்க கோரியும் நேற்று ஆலங்காடு கிழக்கு கடற்கரை சாலையில் ஆலங்காடு, உப்பூர் ஆகிய கிராமங்களை சேர்ந்த மக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் முன்னாள் ஊராட்சி தலைவர்கள் மோகன், சுப்பிரமணியன், முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் சித்திரவேல், தே.மு.தி.க. நிர்வாகி பாண்டி, தி.மு.க. ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர் பாலாஜி உள்பட 300–க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோ‌ஷங்கள் எழுப்பினர்.


இதுபற்றி தகவல் அறிந்த திருத்துறைப்பூண்டி வட்ட வழங்கல் அலுவலர் தங்கமணி, முத்துப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ், முத்துப்பேட்டை மின்சார வாரிய செயற்பொறியாளர் பிரபு ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து சாலைமறியல் கைவிடப்பட்டது. இதனால் திருத்துறைப்பூண்டி–முத்துப்பேட்டை சாலையில் 4 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story