கோர்ட்டில் தீர்ப்பு சாதகமாக வந்தால் தஞ்சை பெரியகோவிலில் தியான பயிற்சி நடத்தப்படும் ரவிசங்கர் குருஜி பேட்டி


கோர்ட்டில் தீர்ப்பு சாதகமாக வந்தால் தஞ்சை பெரியகோவிலில் தியான பயிற்சி நடத்தப்படும் ரவிசங்கர் குருஜி பேட்டி
x
தினத்தந்தி 8 Dec 2018 11:00 PM GMT (Updated: 8 Dec 2018 6:42 PM GMT)

கோர்ட்டில் தீர்ப்பு சாதகமாக வந்தால் தஞ்சை பெரியகோவிலில் தியான பயிற்சி நடத்தப்படும் என்று ரவிசங்கர் குருஜி கூறினார்.

தஞ்சாவூர்,

பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ரவிசங்கர் குருஜி தலைமையில் தஞ்சை பெரியகோவிலில் 2 நாட்கள் தியான பயிற்சி வகுப்பு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு தொல்லியல் துறை அனுமதி வழங்கியது.

உலக பாரம்பரிய சின்னமாக விளங்கும் தஞ்சை பெரியகோவிலில் தியான பயிற்சி நடத்தக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும் இது தொடர்பாக மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, பெரியகோவில் வளாகத்தில் தியான பயிற்சி நடத்த தடை விதித்து உத்தரவிட்டது. இதையடுத்து அங்கு போடப்பட்டு இருந்த பந்தலும், மேடையும் அகற்றப்பட்டது.

இதையடுத்து பெரிய கோவிலில் நடக்க இருந்த தியான பயிற்சி தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடந்தது. நேற்று காலை 2-வது நாளாக இந்த தியான பயிற்சி நடந்தது. ரவிசங்கர்குருஜி தலைமையில் நடந்த இந்த பயிற்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பயிற்சியில் ரவிசங்கர்குருஜி பேசியதாவது:-

தமிழகத்தில் எத்தனையோ கோவில்கள் பாழடைந்து கிடக்கிறது. அதை சரி செய்ய யாருக்கும் அக்கறை இல்லை. ஆனால் கோவிலில் தியான வகுப்பு நடத்தினால் மட்டும் எதிர்க்கிறார்கள். நான் தஞ்சையை சேர்ந்தவன். தஞ்சை மக்கள் நலமுடன் இருக்க கோவிலில் ஆன்மிக சொற்பொழிவு நடத்த முடிவு செய்தேன்.

கோவிலில் நடத்தினால் ஏராளமானோர் கலந்து கொண்டு பயனடைவார்கள் என்று ஏற்பாடு செய்தேன். சொற்பொழிவு நடந்தால் கோவில் இடிந்து விடும் என நினைத்து எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். இதேபோல் ஆற்றங் கரைகள் மாசு அடைந்து சுத்தம் செய்யப்படாமல் உள்ளது. அதை சுத்தம் செய்ய யாருக்கும் அக்கறை இல்லை. ஆற்றங்கரையில் ஏன் தற்கொலைகள் அதிகம் நடப்பதில்லை என்றால் அந்த ஆற்று நீருக்கு புனித தன்மை உண்டு. அதை பார்த்தவுடன் மனதில் தெளிவு பிறக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தியான பயிற்சி முடிந்து வந்த ரவிசங்கர்குருஜி நிருபர்களிடம் கூறுகையில், “கோவிலில் தியானம் செய்வதற்கு தடை வாங்குகிறார்கள். ஏன் என்று தெரியவில்லை. தியானம் செய்வதற்குத்தான் கோவில் உள்ளது. அந்த கோவிலில் தியானம் செய்வதற்கு தடை வாங்குவது யோசனை செய்ய வேண்டிய விஷயம். இது தொடர்பான வழக்கில் தீர்ப்பு சாதகமாக வந்தால் பெரியகோவிலில் தியான பயிற்சி வகுப்பு நிச்சயமாக நடத்தப்படும்”என்றார்.

பின்னர் அவர் அங்கிருந்து காரில் புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில், திருவையாறில் உள்ள கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் அங்கிருந்து தஞ்சை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள சரபோஜி கல்லூரி மைதானத்தில் உள்ள ஹெலிபேடு தளத்திற்கு மதியம் 12.15 மணிக்கு வந்தார். அங்கிருந்து ஹெலிகாப்டரில் புதுக்கோட்டைக்கு சென்று புயலால் சேதம் அடைந்த பகுதிகளை பார்வையிட்டு மீண்டும் ஹெலிகாப்டர் மூலம் மதியம் 3 மணிக்கு தஞ்சை வந்தார்.

இரவு 7.15 மணி அளவில் தஞ்சை பெரியகோவிலுக்கு சென்ற ரவிசங்கர்குருஜி அங்குள்ள அனைத்து சன்னதிகளுக்கும் சென்று தரிசனம் செய்தார்.

Next Story