நீலகிரியில் சுற்றுலாவை மேம்படுத்த மேட்டுப்பாளையம்– குன்னூருக்கு சிறப்பு மலை ரெயில்


நீலகிரியில் சுற்றுலாவை மேம்படுத்த மேட்டுப்பாளையம்– குன்னூருக்கு சிறப்பு மலை ரெயில்
x
தினத்தந்தி 8 Dec 2018 10:30 PM GMT (Updated: 8 Dec 2018 6:53 PM GMT)

நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலாவை மேம்படுத்த மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கு சிறப்பு மலைரெயில் சேவை நேற்று தொடங்கப்பட்டது.

மேட்டுப்பாளையம்,

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு மலைரெயில் இயக்கப்படுகிறது. இந்த மலைரெயில் யுனெஸ்கோ அமைப்பின் பாரம்பரிய அந்தஸ்தை பெற்று உள்ளது. மலைரெயிலில் பயணம் செய்வது குழந்தைகளுக்கு மட்டுமின்றி பெரியவர்களுக்கும் மகிழ்ச்சியை தரும் பயணமாக உள்ளது.

நீலகிரியில் சுற்றுலாவை மேம்படுத்தும் விதமாக மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கு சிறப்பு மலைரெயில் இயக்கப்படும் என்று சேலம் ரெயில்வே கோட்ட நிர்வாகம் அறிவித்து இருந்தது.

இதைத்தொடர்ந்து மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கு சிறப்பு மலைரெயில் சேவை நேற்று தொடங்கியது. காலை 9.10 மணிக்கு 3 பெட்டிகள் இணைக்கப்பட்டு மலைரெயில் குன்னூருக்கு புறப்பட்டு சென்றது. இந்த ரெயில் பர்னஸ் ஆயில் மூலம் நீராவி என்ஜினில் இயக்கப்படுகிறது.

இந்த ரெயிலில் முதல் வகுப்பில் 32 இருக்கைகளும், 2–வது வகுப்பில் 100 இருக்கைகளும் என மொத்தம் 132 இருக்கைகள் உள்ளன. முதல் வகுப்பிற்கு ரூ.1210–ம், 2–வது வகுப்பிற்கு ரூ.815–ம் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. நேற்று மலைரெயிலில் பயணம் செய்த சுற்றுலா பயணிகளுக்கு தண்ணீர் பாட்டில், ரொட்டி உள்பட ரூ.200 மதிப்புள்ள உணவு பொருட்கள் வழங்கப்பட்டன.

இந்த விழாவில் கோவை ரெயில்வே வணிக மேலாளர் சிட்டிபாபு, ரெயில் நிலைய மேலாளர் கிருஷ்ணமூர்த்தி, என்ஜீனியர் முகமது அஸ்ரப் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக மேட்டுப்பாளையம் ரெயில் நிலைய வளாகத்தில் அமைந்து உள்ள நீலகிரி மலைரெயில் அருங்காட்சியகத்தை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.

சிறப்பு மலை ரெயிலில் பயணம் செய்ய காலை 8.45 மணி வரை முன்பதிவு வசதி செய்யப்பட்டு உள்ளது. இந்த மலைரெயில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 1.30 மணிக்கு குன்னூரில் இருந்து புறப்பட்டு மாலை 4.20 மணிக்கு மேட்டுப்பாளையத்திற்கு வருகிறது.


Next Story