4–வது நாளாக உண்ணாவிரதம்: தண்டனை கைதிகளில் மேலும் 2 பேர் மயக்கம்


4–வது நாளாக உண்ணாவிரதம்: தண்டனை கைதிகளில் மேலும் 2 பேர் மயக்கம்
x
தினத்தந்தி 8 Dec 2018 11:30 PM GMT (Updated: 8 Dec 2018 7:47 PM GMT)

புதுவை சிறையில் தண்டனை கைதிகள் நேற்று 4–வது நாளாக உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். இதில் மேலும் 2 பேர் மயக்கம் அடைந்தனர்.

புதுச்சேரி,

புதுச்சேரி காலாப்பட்டில் உள்ள மத்திய சிறையில் 54 தண்டனை கைதிகள் உள்ளனர். இதில் 25 பேர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு பரோலில் செல்ல அனுமதி கேட்டனர். ஆனால் சிறை நிர்வாகம் அனுமதி வழங்கவில்லை. இதனை கண்டித்து கடந்த 5–ந் தேதி முதல் அவர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் அவர்கள் 3 வேளையும் சாப்பிட மறுத்து வருகின்றனர்.

சிறைத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் அவர்கள் போராட்டத்தை கைவிட மறுத்தனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் போராட்டத்தில் ஈடுபட்ட 7 பேர் மயக்கம் அடைந்தனர். அவர்களில் 2 பேர் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். 5 பேர் சிறையில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நேற்று 4–வது நாளாக இந்த போராட்டம் நடந்தது. நேற்று காலை தண்டனை கைதிகளான பிரேம்குமார், ரவி ஆகிய 2 பேரும் மயங்கி விழுந்தனர். உடனே போலீஸ் காவலுடன் அவர்கள் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக தண்டனை கைதி பிரேம்குமார் கூறும் போது, ‘புதுவை ஜெயிலில் தண்டனை கைதிகள் குடும்பத்தினரை பார்க்க பரோல் கேட்டால் மறுக்கப்படுகிறது. கைதிகளுக்கு தரமான உணவும், மருத்துவ வசதிகளும் வழங்கப்படவில்லை. தமிழகத்தில் மாணவிகளை உயிரோடு எரித்து கொன்றவர்களையே விடுவிக்கின்றனர். ஆனால் புதுவையில் கைதிகளுக்கு பரோல் கூட வழங்க மறுக்கின்றனர். குடும்பத்தினரை பார்க்க முடியாமல் தவிக்கும் என்னை கருணை கொலை செய்யுமாறு நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளேன். இதற்கும் அனுமதிக்காவிட்டால் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து எனது உயிரை மாய்த்துக்கொள்வேன்’ என்றார்.


Next Story