சேலத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கு 13-ந் தேதி அடிக்கல் நாட்டு விழா முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கிறார்


சேலத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கு 13-ந் தேதி அடிக்கல் நாட்டு விழா முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கிறார்
x
தினத்தந்தி 9 Dec 2018 4:30 AM IST (Updated: 9 Dec 2018 2:36 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கு 13-ந் தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கிறார்.

சேலம், 

சேலம் பழைய பஸ் நிலையத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் அடிக்கல் நாட்டு விழா தொடர்பாக ஆய்வு நடைபெற்றது. அப்போது பன்னீர் செல்வம் எம்.பி., வெங்கடாசலம் எம்.எல்.ஏ., மாநகராட்சி ஆணையாளர் சதீஷ், செயற்பொறியாளர் காமராஜ் உள்பட பலர் உடனிருந்தனர்.

இந்த ஆய்வு முடிவில் மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் கூறியதாவது:-

சேலம் மாநகரில் சீர்மிகு நகரம் (ஸ்மார்ட் சிட்டி) திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா மற்றும் பிற திட்டங்களின் கீழ் முடிக்கப்பெற்றுள்ள பணிகளை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி பழைய பஸ் நிலையத்தில் வருகிற 13-ந் தேதி நடைபெறுகிறது. இந்த திட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

ஸ்மார்ட் சிட்டி தேர்வு பட்டியலில் சேலம் மாநகராட்சி தேர்வு செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்வதற்காக திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது. 25 திட்டப்பணிகள் ரூ.1,000 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட உள்ளது.

முதற்கட்டமாக ரூ.92 கோடியே 13 லட்சம் மதிப்பீட்டில் பழைய பஸ் நிலையத்தை ஈரடுக்கு பஸ் நிலையமாக மாற்றியமைக்கும் பணிகள், ரூ.18 கோடியே 8 லட்சம் மதிப்பீட்டில் திருமணி முத்தாற்றின் கரைகளை மேம்படுத்துதல், ரூ.7 கோடியே 90 லட்சம் மதிப்பீட்டில் அடுக்குமாடி வாகன நிறுத்தம் அமைத்தல், ரூ.4 கோடியே 30 லட்சம் மதிப்பீட்டில் நுண் உயிரி உரம் தயாரிக்கும் மையம் உள்பட ரூ.166 கோடியே 52 லட்சம் மதிப்பீட்டிலான பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் ரூ.4 கோடியே 42 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு உள்ள 5 நுண் உயிரி உரம் தயாரிக்கும் மையம் மற்றும் கல்வி நிதியின் கீழ் ரூ.68 லட்சம் மதிப்பீட்டில் கோட்டை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகம் மற்றும் ரூ.26 கோடியே 20 லட்சம் மதிப்பீட்டில் பாதாள சாக்கடை திட்டம் மற்றும் தனிக்குடிநீர் திட்டம் நிறைவுற்ற பகுதிகளில் 110 சாலைகள் மறு சீரமைக்கும் பணிகள் உள்பட மொத்தம் ரூ.198 கோடியே 85 லட்சம் மதிப்பீட்டிலான பணிகளை முதல்-அமைச்சர் தொடங்கி வைக்கிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story