ரணி அருகே பரபரப்பு தாலி கட்டும் நேரத்தில் திருமணம் நிறுத்தம் உறவினர் வாலிபரை மணப்பெண் மணந்தார்


ரணி அருகே பரபரப்பு தாலி கட்டும் நேரத்தில் திருமணம் நிறுத்தம் உறவினர் வாலிபரை மணப்பெண் மணந்தார்
x
தினத்தந்தி 10 Dec 2018 4:30 AM IST (Updated: 9 Dec 2018 10:29 PM IST)
t-max-icont-min-icon

ஆரணி அருகே தாலி கட்டும் நேரத்தில் திருமணம் நின்றது. இதனையடுத்து உறவினர் வாலிபருடன் மணப்பெண்ணுக்கு திருமணம் நடைபெற்றது.

ஆரணி, 

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த தெள்ளூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜகோபால், தி.மு.க. முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர். இவரது மகள் சந்தியாவுக்கும் (வயது 22) அரையாளத்தை அடுத்த ரத்தினந்தாங்கல் கிராமத்தை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் பத்மநாபன் என்பவரது மகன் சண்முகத்திற்கும் (25) திருமணம் செய்ய இரு வீட்டாரும் முடிவு செய்தனர். நேற்று இவர்களது திருமணம் ஆரணியில் நடக்க இருந்தது.

அதன்படி, மாப்பிள்ளை வீட்டார் திருமண ஏற்பாடுகளை செய்தனர். நேற்று முன்தினம் பெண் வீட்டார் சார்பில் தி.மு.க. கொடி மற்றும் பேனர்கள் அந்த பகுதியில் வைத்திருந்தனர். இதைப்பார்த்த மாப்பிள்ளை வீட்டார் ஏன் இப்படி எல்லாம் செய்கிறீர்கள்? நாங்கள் அமைச்சரை திருமணத்திற்கு அழைத்திருக்கிறோம். இது போல் செய்தால் அவர் திருமணத்திற்கு வருவாரா? என கேட்டனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் நடந்துள்ளது. அங்கிருந்தவர்கள் அவர்களை சமாதானப்படுத்தினர்.

அதைத் தொடர்ந்து மணமக்கள் அழைப்பு நடைபெற்றது. அப்போது பத்மநாபனிடம், அவரது மூத்த மகன் கார்த்திகேயன் சரிவர பொருட்கள் வாங்கித்தரவில்லை என கேட்டுள்ளார். அப்போது பத்மநாபனும் பதில் கூறவே ஒருவருக்கொருவர் ஆபாசமாக பேசியவாறு இருந்துள்ளனர். இதனைப் பார்த்து மணக்கோலத்தில் இருந்த மாப்பிள்ளை சண்முகம், மாலையை தூக்கி எறிந்துவிட்டு அண்ணன் கார்த்திகேயனிடம் தகராறு செய்துள்ளார்.

அப்போது அங்கு வந்த மணமகளின் தந்தை ராஜகோபால், மாப்பிள்ளையை பார்த்து மாலையை கழற்றி விட்டு இது போல் தகராறு செய்யலாமா? என கேட்டதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த மாப்பிள்ளை சண்முகம் “நான் என் அண்ணனிடம் தான் தகராறு செய்கிறேன், என்னை யாரும் இதுபோல் கண்டித்ததில்லை, நீ இந்த சபையிலேயே என் காலில் விழுந்தால்தான் உன் மகள் கழுத்தில் தாலிகட்டுவேன்” என்று கூறியதாக தெரிகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த மணமகள் சந்தியா “எனக்கும், சண்முகத்திற்கும் திருமணம் நடத்தி வைத்தால் நான் தற்கொலை செய்து கொள்வேன். இப்படி மணவிழாவிலேயே தகராறு செய்பவரிடம் நான் எப்படி வாழ்க்கையை ஆரம்பிப்பது” என சத்தம் போட்டுள்ளார்.

இந்த நிலையில் அதிகாலையில் மணமகள் குடும்பத்தினர் சந்தியாவை அழைத்துக்கொண்டு தெள்ளூர் கிராமத்திற்கு சென்றனர். அங்கு சந்தியாவுக்கு ராஜகோபாலின் தங்கை சரஸ்வதி - முனுசாமி தம்பதியரின் மகன் ஏழுமலையை (27) திருமணம் செய்து வைக்க திடீர் முடிவு செய்தனர். இதனையடுத்து அங்குள்ள வைதேகி அம்மன் கோவிலில் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.

இதற்கிடையில் ஆரணியில் திருமணம் நடைபெற இருந்த மண்டபத்தில் மணமகளின் குடும்பத்தார் யாரும் இல்லாததை கண்டு மணமகன் குடும்பத்தார் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் அங்கு நடைபெற இருந்த திருமணம் நின்று விட்டது.


இது தொடர்பாக பத்மநாபன் ஆரணி தாலுகா போலீசிலும், ஆரணி துணை போலீஸ் சூப்பிரண்டிடமும் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் இரு தரப்பினரையும் அழைத்து பேசினர். மேலும் இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் ஆரணியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story