வங்கி பெண் ஊழியர் பாலியல் பலாத்கார வழக்கு: ஆட்டோ டிரைவரை பிடித்து போலீசார் விசாரணை


வங்கி பெண் ஊழியர் பாலியல் பலாத்கார வழக்கு: ஆட்டோ டிரைவரை பிடித்து போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 10 Dec 2018 3:45 AM IST (Updated: 10 Dec 2018 12:12 AM IST)
t-max-icont-min-icon

வங்கி பெண் ஊழியர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் ஆட்டோ டிரைவர் ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கும்பகோணம்,

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த 23 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவருக்கு தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள ஒரு வங்கியில் வேலை கிடைத்தது. அந்த பெண் தனது பணி தொடர்பான பயிற்சி பெறுவதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு ராஜஸ்தானில் இருந்து கும்பகோணம் வந்தார்.

கும்பகோணம் ரெயில் நிலையத்தில் இருந்து தான் செல்ல வேண்டிய இடத்துக்கு செல்வதற்காக ஒரு ஆட்டோவில் ஏறினார். அந்த ஆட்டோ குறிப்பிட்ட இடத்துக்கு செல்லாமல் வேறு பாதையில் சென்றுள்ளது. இதனால் பதற்றம் அடைந்த அந்த பெண் கூச்சல் போட்டார். இதையடுத்து அந்த ஆட்டோவின் டிரைவர், கும்பகோணம் அருகே உள்ள செட்டி மண்டபம் பைபாஸ் சாலை பகுதியில் இறக்கி விட்டு சென்றார்.

அப்போது நள்ளிரவு நேரம் என்பதால் அங்கு ஆள்நடமாட்டம் இல்லை. இதனால் பரிதவித்த அந்த பெண்ணை மோட்டார்சைக்கிளில் வந்த வாலிபர்கள் சிலர் கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்தனர். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக கும்பகோணம் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் கும்பகோணத்தை சேர்ந்த தினேஷ் (வயது24), வசந்த் (21), அன்பரசன் (19), புருஷோத்தமன்(19) ஆகிய 4 பேர் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

மேலும் கும்பகோணம் ரெயில் நிலையத்தில் இருந்து அந்த பெண்ணை அழைத்து சென்று ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் விட்டு சென்ற ஆட்டோ டிரைவரை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து இருந்தனர்.

இந்த நிலையில் கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் பகுதியில் உள்ள திருப்பணிப்பேட்டை ஆட்டோ நிறுத்தத்தில் 2 நாட்களுக்கு முன்பு ஒரு ஆட்டோவின் அடையாளங்கள் மாற்றப்பட்டதாகவும், அந்த ஆட்டோவின் டிரைவர், ஆட்டோ நிறுத்தத்துக்கு சரிவர வருவதில்லை என்பதும் தனிப்படை போலீசாருக்கு தெரிய வந்தது.

இதனால் சந்தேகம் அடைந்த தனிப்படை போலீசார் மாறுவேடத்தில் சென்று அடையாளம் மாற்றப்பட்ட ஆட்டோவில் சென்று டிரைவரிடம் பேச்சு கொடுத்தனர். ஆட்டோவின் நிறத்தை ஏன் மாற்றினீர்கள் என்று கேட்டபோது, டிரைவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறி உள்ளார்.

இதையடுத்து போலீசார் அந்த ஆட்டோ டிரைவரை பிடித்து ரகசிய இடத்துக்கு கொண்டு சென்று விசாரித்து வருகிறார்கள். இந்த டிரைவரின் புகைப்படத்தை தற்போது ராஜஸ்தானில் உள்ள அந்த பெண்ணுக்கு செல்போன் மூலம் போலீசார் அனுப்பி உள்ளனர். இவருக்கும், கைது செய்யப்பட்டுள்ள 4 பேருக்கும் இடையே தொடர்பு உள்ளதா? என்பது பற்றியும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Next Story