கும்மிடிப்பூண்டி அருகே மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்கில் 4 பேர் கைது
கும்மிடிப்பூண்டி அருகே மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்கில் தொடர்புடைய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
கும்மிடிப்பூண்டி,
கும்மிடிப்பூண்டியை அடுத்த புதுகும்மிடிப்பூண்டியில் உள்ள பாலீஸ்வரன்கண்டிகை கிராமத்தை சேர்ந்தவர் மகபூப் அலி (வயது 38). இவரது மோட்டார் சைக்கிள், கடந்த 6–ந்தேதி கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட ஜெய்ஹிந்த் நகரில் திருட்டு போனது. இது தொடர்பாக கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், நேற்று காலை சப்–இன்ஸ்பெக்டர் நாராயணமூர்த்தி தலைமையில் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வேற்காடு அருகே சென்னை–கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு ஒரு மோட்டார் சைக்கிளுடன் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த 4 பேரை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்களிடம் இருந்த மோட்டார் சைக்கிள் கடந்த 6–ந் தேதி திருட்டு போன மெகபூப் அலியின் மோட்டார் சைக்கிள் என்பது தெரியவந்தது.
இதனையடுத்து இந்த வழக்கில் தொடர்புடைய கும்மிடிப்பூண்டி ம.பொ.சி.நகரை சேர்ந்த ராஜ்குமார்(23) மற்றும் 17 வயது உடைய 3 சிறுவர்கள் உள்பட 4 பேரை கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய மற்றொருவரை போலீசார் தேடி வருகின்றனர்.