ஆண்டிப்பட்டி பகுதியில் கடும் பனிப்பொழிவு: செடியிலேயே கருகும் மல்லிகை பூக்கள்


ஆண்டிப்பட்டி பகுதியில் கடும் பனிப்பொழிவு: செடியிலேயே கருகும் மல்லிகை பூக்கள்
x
தினத்தந்தி 9 Dec 2018 9:45 PM GMT (Updated: 9 Dec 2018 7:18 PM GMT)

ஆண்டிப்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் கடும் பனிப்பொழிவு காரணமாக மல்லிகைப்பூக்கள் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. செடியிலேயே பூக்கள் கருகுவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

ஆண்டிப்பட்டி,

ஆண்டிப்பட்டி சுற்றுவட்டார பகுதிகளான கதிர்நரசிங்கபுரம், கன்னியப்பப்பிள்ளைபட்டி, கோத்தலூத்து, சித்தார்பட்டி, பாலக்கோம்பை, தெப்பம்பட்டி, திம்மரசநாயக்கனூர், டி.பொம்மிநாயக்கன்பட்டி, டி.சுப்புலாபுரம், ஏத்தகோவில், சுந்தர்ராஜபுரம் ஆகிய பகுதிகளில் பூக்கள் உற்பத்தி அதிகளவில் நடக்கிறது. மல்லிகை, செவ்வந்தி, செண்டுமல்லி உள்ளிட்ட பல்வேறு வகையான பூக்கள் சாகுபடி செய்யப்படுகின்றன.

இங்கு விளையும் பூக்கள் ஆண்டிப்பட்டி பூ மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 2 மாதங்களாக தொடர் மழை பெய்ததால் பூக்களின் விளைச்சல் சற்று அதிகரித்து காணப்பட்டது. இதனால் மார்க்கெட்டில் பூக்களின் விலை சராசரியாக இருந்தது. ஆனால் கடந்த சில வாரங்களாக ஆண்டிப்பட்டி தாலுகா பகுதியில் மழை பெய்யவில்லை. மாறாக இரவு நேரத்தில் கடும் பனிப்பொழிவு இருந்து வருகிறது.

இதன் காரணமாக ஆண்டிப்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் மல்லிகை பூக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. கடும் பனியால் பூக்கள் அதிகம் பூக்கவில்லை. பூக்கும் பூக்களும் பனியால் செடிகளிலேயே கருகி விடுகிறது. இதன்காரணமாக ஆண்டிப்பட்டியில் செயல்படும் மார்க்கெட்டிற்கு மல்லிகை பூக்களின் வரத்து அடியோடு குறைந்து கொண்டே வருகிறது.

ஆண்டிப்பட்டி பூ மார்க்கெட்டிற்கு தினமும் 10 கிலோ அளவிலேயே மல்லிகைப்பூக்கள் விற்பனைக்கு வருவதாக வியாபாரிகள் கூறுகின்றனர். பனியால் போதுமான வளர்ச்சியின்றி பூக்கள் அளவில் மிகவும் சிறியதாக இருப்பதால், அவற்றை வாங்க வியாபாரிகள் தயக்கம் காட்டி வருகின்றனர்.

ஆண்டிப்பட்டி பூ மார்க்கெட்டில் நேற்று ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.500 வரை விற்பனை செய்யப்பட்டது. மல்லிகைப்பூக்களுக்கு மார்க்கெட்டில் உரிய விலை கிடைத்தாலும், பனியால் பூக்கள் கருகுவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இன்னும் 2 மாதங்களுக்கு பனிப்பொழிவு இருக்கும் என்பதால் மல்லிகை பூக்கள் சாகுபடி தொடர்ந்து பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.

Next Story