20 தொகுதி இடைத்தேர்தலில் வைகோ கணிப்பு பொய்யாகும்; ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. பேட்டி


20 தொகுதி இடைத்தேர்தலில் வைகோ கணிப்பு பொய்யாகும்; ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. பேட்டி
x
தினத்தந்தி 9 Dec 2018 11:30 PM GMT (Updated: 9 Dec 2018 8:09 PM GMT)

தமிழகத்தில் 20 தொகுதி இடைத்தேர்தலில் வைகோ கணிப்பு பொய்யாகும் என்று ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. தெரிவித்தார்

திருப்பரங்குன்றம்,

திருப்பரங்குன்றத்தில் தி.மு.க. மற்றும் அ.ம.மு.க.வினர் அ.தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது.மதுரை புறநகர் எம்.ஜி.ஆர். இளைஞரணி மாவட்ட செயலாளர் வக்கீல் ரமேஷ், திருப்பரங்குன்றம் ஒன்றிய துணை செயலாளர் நிலையூர்

முருகன், பொதுக்குழு உறுப்பினர் முத்துக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியையொட்டி மாற்று கட்சியை சேர்ந்தவர்கள் பசுமலை பஸ் நிறுத்தத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு வந்தனர்.

பின்னர் அங்கு மதுரை புறநகர் அ.தி.மு.க.மாவட்ட செயலாளர் ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. தலைமையில் தி.மு.க. மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை சேர்ந்த 250 பேர் அக்கட்சியில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் இணைந்தனர்.

பின்னர் ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. பேட்டியின்போது கூறியதாவது:–

திருமங்கலத்தில் நடைபெற்ற அ.தி.மு.க. கூட்டத்தில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நகர்புறங்களில் அ.தி.மு.க. வாக்குகள் குறைவாக இருப்பதாக பேசினார். அதற்கு காரணம் அ.தி.மு.க.நிர்வாகிகள், தொண்டர்களை கட்சி பணியில் உற்சாகப்படுத்துவதற்காக தான். கட்சியில் பலம் உள்ளது, பலவீனம் இல்லை.

தற்போது உள்ள நிலையிலே அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும். அ.தி.மு.க. வெற்றி பெற்ற பிறகு அ.ம.மு.க.வினர் அ.தி.மு.க.வில் இணையலாம்.

தமிழகத்தில் 20 தொகுதியில் தி.மு.க.வெற்றி பெறும் என்ற வைகோ கணிப்பு பொய்யாகும். விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க.தான் வெற்றிபெறும்.

இரட்டை இலை சின்னம், அ.தி.மு.க. கட்சி தலைமை கழகம் எங்கு இருக்கிறதோ அங்கு தான் ஜெயலலிதா இருக்கிறார் என்ற உணர்வு அ.தி.மு.க. தொண்டர்களிடம் உள்ளது. எனவே தாய் கழகத்திற்கு அ.ம.மு.க.வினர் தங்களை இணைத்து வருகிறார்கள். கஜா புயல் நிவாரண நிதி மத்திய அரசு தராவிட்டாலும் அ.தி.மு.க. அரசு சமாளிக்கும். எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்தே சக்தி படைத்த அரசாக அ.தி.மு.க. அரசு உள்ளது. மக்களுக்காக நிவாரண நிதியை மத்திய அரசிடம் போராடிபெறுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story