கன்னியாகுமரியில் அய்யப்ப பக்தர்களின் கூட்டம் அலைமோதியது


கன்னியாகுமரியில் அய்யப்ப பக்தர்களின் கூட்டம் அலைமோதியது
x
தினத்தந்தி 10 Dec 2018 4:15 AM IST (Updated: 10 Dec 2018 3:05 AM IST)
t-max-icont-min-icon

கன்னியாகுமரியில் அய்யப்ப பக்தர்களின் கூட்டம் அலைமோதியது.

கன்னியாகுமரி,

உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஏராளமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். ஆண்டு முழுவதும் சுற்றுலா பயணிகள் வந்து சென்றாலும் நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய மூன்று மாதங்கள் அய்யப்ப பக்தர்களின் சீசன் காலமாக அழைக்கப்படுகிறது. இந்த காலக்கட்டத்தில் சபரிமலையில் மண்டல பூஜை, மகரவிளக்கு பூஜைக்காக செல்லும் பக்தர்கள் கன்னியாகுமரிக்கு வருவார்கள். இதையொட்டி நகர் முழுவதும் சீசன் கடைகள் அமைக்கப்படும்.

இந்த ஆண்டு அய்யப்ப பக்தர்களின் சீசன் கடந்த மாதம் 17-ந் தேதி தொடங்கியது. இதையொட்டி கன்னியாகுமரி பேரூராட்சி சார்பில் 500-க்கும் மேற்பட்ட தற்காலிக கடைகள் வைக்க அனுமதி வழங்கப்பட்டது.

சபரிமலையில் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டங்களால் அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவியது. இதைத்தொடர்ந்து சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் குறைந்தது. இதுபோல கன்னியாகுமரிக்கு வரும் பக்தர்கள் கூட்டமும் குறைந்து காணப்பட்டது. இதனால் பக்தர்களை நம்பி கடை போட்ட சீசன் கடை வியாபாரிகளும், நிரந்தர கடை வியாபாரிகளும் கவலை அடைந்தனர்.

இந்த நிலையில் தற்போது சபரிமலையில் போராட்டங்கள் குறைந்ததை தொடர்ந்து அங்கு அதிக அளவில் பக்தர்கள் செல்ல தொடங்கியுள்ளனர். இதையடுத்து கன்னியாகுமரியிலும் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது.

விடுமுறை தினமான நேற்று கன்னியாகுமரியில் ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழக அய்யப்ப பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் ஏராளமானோர் குவிந்தனர். அவர்கள் கடலில் புனித நீராடி பகவதி அம்மன் கோவிலில் தரிசனம் செய்தனர். இதனால் கோவிலில் நீண்ட வரிசை காணப்பட்டது. கடற்கரை, காந்தி மண்டபம் சாலை என எங்கு பார்த்தாலும் அய்யப்ப பக்தர்கள் கூட்டமாகவே காணப்பட்டது. பக்தர்களின் வருகை காரணமாக வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
1 More update

Next Story