நாகர்கோவிலில் செல்போன் வாங்குவது போல் நடித்து, திருடிய வாலிபர் கைது


நாகர்கோவிலில் செல்போன் வாங்குவது போல் நடித்து, திருடிய வாலிபர் கைது
x
தினத்தந்தி 9 Dec 2018 10:15 PM GMT (Updated: 9 Dec 2018 9:52 PM GMT)

நாகர்கோவிலில் செல்போன் வாங்குவது போல் நடித்து, 2 செல்போன்களை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

நாகர்கோவில்,

பூதப்பாண்டியை அடுத்த தடிக்காரன்கோணம் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெர்லின் (வயது 22). இவருடைய பெரியப்பா மகனுக்கு சொந்தமான செல்போன் கடை ஒன்று நாகர்கோவில் மணிமேடை சந்திப்பு பகுதியில் உள்ளது. அந்த கடையை ஜெர்லின் கவனித்து வந்தார்.

அந்த கடைக்கு இரவு மேலமுட்டம் பகுதியை சேர்ந்த சுபாஷ் (21) என்பவர் வந்தார். அப்போது கடையில் ஜெர்லின் இருந்தார். அவரிடம் பழைய செல்போன்கள் வேண்டும் என்று சுபாஷ் கூறியுள்ளார்.

அதைத்தொடர்ந்து ஜெர்லினும் இரண்டு செல்போன்களை எடுத்து காண்பித்தார். அதை சுபாஷ் வாங்கி பார்த்தார். அதன்பிறகு புதிய செல்போன்களை காட்டுங்கள் என்று அவர் கூறினார். எனவே ஜெர்லின் புதிய செல்போன்களை எடுக்கச் சென்றபோது, பழைய செல்போன்கள் இரண்டையும் சுபாஷ் திருடிக்கொண்டு கடையில் இருந்து தப்பி ஓடினார்.

இதைப்பார்த்த கடையில் இருந்த மற்றொரு ஊழியர் அனீஷ் திருடன்... திருடன்... என கூச்சல் போட்டார். உடனே ஜெர்லினும், அனீசும் சேர்ந்து சுபாசை சிறிது தூரம் துரத்திச்சென்று சுற்றிவளைத்து பிடித்தனர். பின்னர் அவர் திருடிய 2 செல்போன்களுடன் வடசேரி போலீஸ் நிலையத்தில் சுபாசை ஒப்படைத்தனர். சுபாசை போலீசார் கைது செய்து, இதே போல் வேறு கடைகளில் திருடி உள்ளாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story