மேட்டுப்பாளையம் மார்க்கெட்டில்: உருளைக்கிழங்கு விலை கடும் வீழ்ச்சி - விவசாயிகள் கவலை


மேட்டுப்பாளையம் மார்க்கெட்டில்: உருளைக்கிழங்கு விலை கடும் வீழ்ச்சி - விவசாயிகள் கவலை
x
தினத்தந்தி 9 Dec 2018 10:00 PM GMT (Updated: 9 Dec 2018 10:59 PM GMT)

மேட்டுப்பாளையம் மார்க்கெட்டில் உருளைக்கிழங்கு விலை கடும் வீழ்ச்சி அடைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

மேட்டுப்பாளையம்,

மேட்டுப்பாளையம் மார்க்கெட் நீலகிரி மாவட்ட விவசாய விளைபொருள்களின் முக்கிய வியாபார கேந்திரமாக விளங்குகிறது. இங்கு 100-க்கும் மேற்பட்ட உருளைக்கிழங்கு மண்டிகள் உள்ளன. நீலகிரி மாவட்டம் மற்றும் கோலார், குஜராத் ஆகிய பகுதிகளில் இருந்து உருளைக்கிழங்குகள் லாரி மூலம் கொண்டு வரப்படுகின்றன.

இந்தநிலையில் நேற்று நீலகிரி மாவட்டத்தில் இருந்து 70 லோடு, கோலாரில் இருந்து 25 லோடு, குஜராத்தில் இருந்து 15 லோடு உருளைக்கிழங்கு வந்தது. வரத்து அதிகமானதால் கடும் விலை வீழ்ச்சி ஏற்பட்டது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.

கடந்த வாரம் நீலகிரி மாவட்ட உருளைக்கிழங்கு (45 கிலோ மூட்டை) ரூ.1300, கோலார் உருளைக்கிழங்கு ரூ.1050, குஜராத் உருளைக்கிழங்கு ரூ.700-க்கு விற்பனையானது. ஆனால் நேற்று நீலகிரி உருளைக்கிழங்கு (45 கிலோ மூட்டை) ரூ.790, கோலார் உருளைக்கிழங்கு ரூ.750, குஜராத் உருளைக்கிழங்கு ரூ.500-க்கு விற்பனையானது.

இந்த விலை வீழ்ச்சி உருளைக்கிழங்கு விவசாயிகளை பெரும் நஷ்டத்திற்கு உள்ளாக்கியது. விதைக்காசு மற்றும் விவசாயத்திற்கு செலவிட்ட தொகையைக்கூட எடுக்க முடியாமல் அவர்கள் கவலை அடைந்தனர். இதேநிலை நீடித்தால் வரும் காலங்களில் உருளைக்கிழங்கு விவசாயம் அழிந்து விடக்கூடிய அபாய சூழ்நிலை ஏற்படும். விவசாயத்தை காக்க மத்திய, மாநில அரசுகள் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

Next Story