கஜா புயல் பாதிப்பு கணக்கெடுப்பை ஆய்வு செய்ய வந்த அதிகாரியை சிறைபிடித்து பொதுமக்கள் சாலை மறியல்


கஜா புயல் பாதிப்பு கணக்கெடுப்பை ஆய்வு செய்ய வந்த அதிகாரியை சிறைபிடித்து பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 11 Dec 2018 4:30 AM IST (Updated: 11 Dec 2018 12:18 AM IST)
t-max-icont-min-icon

கஜா புயல் பாதிப்பு கணக்கெடுப்பை ஆய்வு செய்ய வந்த அதிகாரியை சிறைப்பிடித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருத்துறைப்பூண்டி அருகே நடந்த இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

திருத்துறைப்பூண்டி,

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பகுதியில் கஜா புயலால் சேதமடைந்த ஓட்டு வீடுகள், கூரை வீடுகள், மாடி வீடுகள் என அனைத்துக்கும் நிவாரணம் வழங்க வேண்டும். புயல் பாதிப்புகளை கணக்கெடுக்கும் பணியை துரிதப்படுத்த வேண்டும். புயலால் பாதிக்கப்பட்ட அனைத்து தென்னை மரங்களுக்கும் கூடுதல் நிவாரணம் வழங்க வேண்டும்.

விரைவாக மின் இணைப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருத்துறைப்பூண்டி பகுதியில் பொதுமக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் திருத்துறைப்பூண்டி நகராட்சிக்கு உட்பட்ட அரியலூர் பகுதியில் புயல் பாதிப்பு குறித்த கணக்கெடுப்பு பணியை நேற்று திருச்சி மண்டல டாஸ்மாக் முதுநிலை மேலாளரும், கஜா புயல் சிறப்பு அதிகாரியுமான வேலுசாமி ஆய்வு செய்தார். அப்போது அந்த பகுதி பொதுமக்கள் வருவாய் அதிகாரியை, திடீரென சிறைப்பிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். புயல் பாதிப்புகளை முறையாக கணக்கெடுக்கவில்லை என்றும், நிவாரண பொருட்கள் வழங்கவில்லை என்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

ஆடலரசன் எம்.எல்.ஏ., தி.மு.க. நகர செயலாளர் பாண்டியன், இந்திய கம்யூனிஸ்டு நகர செயலாளர் முருகேசன், மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் சந்திரராமன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு நகர செயலாளர் ரகுராமன், மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் சாமிநாதன், மாதர் சங்க ஒன்றிய செயலாளர் தமிழ்ச்செல்வி ராஜா, விவசாய சங்க நகர செயலாளர் சுந்தர் உள்பட பலர் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த திருத்துறைப்பூண்டி தாசில்தார் மகேஷ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கணக்கெடுப்பு பணியை முறையாக மேற்கொள்ள நடவடிக்கை எடுப்பதாகவும், நிவாரண பொருட்கள் விரைந்து வழங்கப்படும் என்றும் தாசில்தார் உறுதி அளித்தார். அதன்பேரில் பொதுமக்கள், அதிகாரியை விடுவித்தனர்.

இந்த சாலை மறியல் போராட்டம் காரணமாக அந்த பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story