மஞ்சூர் அருகே: பசுவை அடித்துக்கொன்ற சிறுத்தைப்புலி - பொதுமக்கள் பீதி


மஞ்சூர் அருகே: பசுவை அடித்துக்கொன்ற சிறுத்தைப்புலி - பொதுமக்கள் பீதி
x
தினத்தந்தி 10 Dec 2018 10:00 PM GMT (Updated: 2018-12-11T01:22:37+05:30)

மஞ்சூர் அருகே பசுவை அடித்துக்கொன்ற சிறுத்தைப்புலியால் பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர்.

மஞ்சூர்,

மஞ்சூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான தேயிலை தோட்டங்களும், அதனை சுற்றி அடர்ந்த வனப்பகுதிகளும் உள்ளன. இங்குள்ள வனப்பகுதிகளில் காட்டுயானை, காட்டெருமை, கரடி, சிறுத்தைப்புலி உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இவை அவ்வப்போது உணவு மற்றும் தண்ணீரை தேடி குடியிருப்பு பகுதிகளில் புகுந்து அட்டகாசம் செய்கின்றன. மஞ்சூர் அருகே உள்ளது கெரப்பாடு. இங்கு 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றன. இங்குள்ள மக்கள் விவசாயம், கால்நடை வளர்ப்பு ஆகியவற்றை முக்கிய தொழிலாக கொண்டு வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று காலை அதே பகுதியை சேர்ந்த ஈஸ்வரன்(வயது 50) என்பவருக்கு சொந்தமான மாட்டு கொட்டகைக்குள் சிறுத்தைப்புலி ஒன்று புகுந்தது. பின்னர் அங்கிருந்த ஒரு பசுமாட்டை அடித்துக்கொன்றது.

பசுவின் அலறல் சத்தம் கேட்டு ஈஸ்வரன் அங்கு சென்றார். அப்போது கொட்டகையில் இருந்த சிறுத்தைப்புலி வனப்பகுதியை நோக்கி தப்பி ஓடியது. இதை பார்த்த அவர் கூச்சலிட்டார். மேலும் வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் குந்தா வனவர் ரவி தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர். பின்னர் வனகால்நடை மருத்துவர் பிரின்ஸ் வரவழைக்கப்பட்டு, இறந்த பசுமாடு உடல் பரிசோதனை செய்து அங்கேயே குழி தோண்டி புதைக்கப்பட்டது. குடியிருப்பு பகுதியில் புகுந்து பசுமாட்டை சிறுத்தைப்புலி அடித்துக்கொன்ற சம்பவம் பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story