கோவை காந்திபுரம்: மேம்பாலத்தில் இருந்து குதித்து கல்லூரி மாணவி தற்கொலை முயற்சி


கோவை காந்திபுரம்: மேம்பாலத்தில் இருந்து குதித்து கல்லூரி மாணவி தற்கொலை முயற்சி
x
தினத்தந்தி 10 Dec 2018 10:15 PM GMT (Updated: 10 Dec 2018 8:17 PM GMT)

விரும்பியவரை திருமணம் செய்வதற்கு ஜாதகம் குறுக்கிட்டதால், கல்லூரி மாணவி காந்திபுரம் மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றார். இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-

கோவை,

கோவை மாவட்டம் பொள்ளாச்சி மகாலிங்கபுரத்தை சேர்ந்தவர் முருகன். இவருடைய மகள் நந்தினி(வயது25). கோவை டவுன்ஹாலில் உள்ள அரசு கல்வியியல் கல்லூரியில் எம்.எட். படித்து வருகிறார். விடுமுறையில் வீட்டுக்கு சென்ற அவர், கல்லூரி செல்வதாக கூறிவிட்டு நேற்று அதிகாலை பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்துள்ளார்.

காந்திபுரம் பார்க்கேட் சிக்னல் அருகே நடந்து சென்ற இவர் திடீரென்று புதிய மேம்பாலத்தின் மீது ஏறினார். பின்னர் மேலிருந்து கீழே குதித்தார். இதில் முதுகெலும்பு முறிந்து காயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தார். அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்கள் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். காட்டூர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

போலீசார் விரைந்து வந்து நந்தினியை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.இது குறித்து கோவை காட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மாணவியின் தற்கொலை முயற்சி குறித்து போலீசார் கூறும்போது, ‘மாணவி நந்தினி கடந்த 6 மாதமாக ஒரு வாலிபரை காதலித்து வந்துள்ளார். அந்த வாலிபரை திருமணம் செய்ய விரும்புவதாக பெற்றோரிடம் கூறியுள்ளார். இருவரின் ஜாதக பொருத்தம் பார்த்தபின்தான் திருமணம் குறித்து முடிவு செய்ய முடியும் என்று கூறி, பெற்றோர் ஜாதக பொருத்தம் பார்த்துள்ளனர். ஜாதக பொருத்தம் சரியில்லை என்று ஜோதிடர் கூறியதாக, மாணவியின் பெற்றோர் தெரிவித்துள்ளனர். இதனால் மனவருத்தம் அடைந்த நந்தினி பாலத்தில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார் என்று தெரிவித்தனர்.

Next Story