சத்தியமங்கலம் அருகே மில்லில் தீ விபத்து எந்திரங்கள்– மர பொருட்கள் எரிந்து நாசம்
சத்தியமங்கலம் அருகே மில்லில் ஏற்பட்ட தீ விபத்தில் அங்கிருந்த எந்திரங்கள் மற்றும் மர பொருட்கள் எரிந்து நாசம் ஆனது.
சத்தியமங்கலம்,
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள வரதம்பாளையம் சுசீந்திரன் ‘லே அவுட்’ பகுதியை சேர்ந்தவர் கணேசன் (37). இவருடைய வீட்டின் அருகே மரத்திலான ஜன்னல்கள், கதவுகள், வாசல் நிலைகள், டேபிள் மற்றும் மேஜை போன்றவை செய்யும் மில் வைத்து நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் இவருடைய மில்லி திடீரென தீப்பிடித்தது. பின்னர் தீ கொழுந்துவிட்டு எரிய தொடங்கியது. அப்போது வீட்டின் உள்ளே அயர்ந்து தூங்கி கொண்டிருந்த கணேசன் விழித்தெழுந்தார். திடீரென மில் திடீரென தீப்பிடித்து கொழுந்துவிட்டு எரிவதை கண்டதும் அதிர்ச்சி உடைந்தார். உடனே அவர் பதறியடித்து கொண்டு வீட்டை விட்டு வெளியே வந்தார். மேலும் அவர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றார். ஆனால் முடியவில்லை.
உடனே அங்கிருந்தவர்கள் இதுகுறித்து சத்தியமங்கலம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
எனினும் இந்த தீ விபத்தில் மில்லில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மர ஜன்னல்கள், கதவுகள், வாசல் நிலைகள், தேக்கு மரக்கட்டைகள், மரம் அறுப்பு மற்றும் இழைப்பு எந்திரங்கள் உள்பட பல்வேறு பொருட்கள் எரிந்து நாசம் ஆனது. மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து சத்தியமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.