திருச்சியை தமிழகத்தின் 2-வது தலைநகராக்க வேண்டும் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாய சங்கத்தினர் மனு


திருச்சியை தமிழகத்தின் 2-வது தலைநகராக்க வேண்டும் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாய சங்கத்தினர் மனு
x
தினத்தந்தி 11 Dec 2018 4:15 AM IST (Updated: 11 Dec 2018 2:31 AM IST)
t-max-icont-min-icon

வளர்ந்து வரும் நகரங்கள் பட்டியலில் 8-வது இடத்தை பிடித்து உள்ள திருச்சியை தமிழகத்தின் இரண்டாவது தலைநகராக்க முயற்சி எடுக்கவேண்டும் என்று குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் சங்கத்தினர் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

திருச்சி,

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. அப்போது காவிரி நீர்ப்பாசன விவசாயிகள் நல சங்க தலைவர் ராஜாராம், பொதுச்செயலாளர் காந்தி பித்தன் ஆகியோர் உலக அளவில் வளர்ந்து வரும் நகரங்கள் பட்டியலில் திருச்சி நகரம் உலக அளவில் 8-வது இடத்தை பிடித்து இருப்பதை பாராட்டி கலெக்டர் ராஜாமணிக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

அப்போது அவர்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், உலக அளவில் 8-வது இடத்தில் உள்ள திருச்சியை, மறைந்த முன்னாள் முதல்- அமைச்சர் எம்.ஜி.ஆரின் கனவை நனவாக்கும் வகையில் தமிழகத்தின் இரண்டாவது தலைநகராக்க மாவட்ட நிர்வாகம் முயற்சி எடுக்கவேண்டும். சென்னையில் உள்ள அரசு துறை தலைமை அலுவலகங்களில் பாதியை திருச்சிக்கு மாற்ற வேண்டும். வளர்ச்சிக்கு தேவையான நீரைப்பெற காவிரியில் லாலாப்பேட்டை அருகே மகேந்திர மங்கலத்தில் கதவணை கட்டி ஒரு டி.எம்.சி. தண்ணீரை தேக்கி வைக்க வேண்டும். திருச்சி மாவட்டத்தை வாழை உற்பத்தி மண்டலமாக அறிவிக்கவேண்டும் என கூறப்பட்டு இருந்தது.

துவாக்குடி நகர சி.ஐ.டி.யு. சாலையோர தரைக்கடை வியாபாரிகள் திருச்சி- தஞ்சை சாலையில் 25 வருடங்களுக்கும் மேலாக தரைக்கடை அமைத்து சிறு வியாபாரம் செய்து வருகிறோம். எங்கள் வாழ்வாதாரமே இந்த கடைகளில் தான் உள்ளது. சுப்ரீம் கோர்ட்டும் சாலையோர வியாபாரிகளுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கி உள்ளது. இந்நிலையில் ஒரு தனியார் நிறுவனம் சாலையோர தரைக்கடை வியாபாரிகளை கடைகளை காலி செய்யும்படி மிரட்டி வருகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் எங்கள் வாழ்வாதாரத்தை காக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் எனகோரி மனு கொடுத்தனர்.

புருசோத்தமன் என்பவர் தலைமையில் வந்த சட்டக்கல்லூரி மாணவர்கள் மதுரை ஐகோர்ட்டு உத்தரவுப்படி திருச்சி அரசு சட்டக்கல்லூரி மாணவர்கள் விடுதிக்கான இடத்தை ஒப்படைக்கவேண்டும். இல்லை என்றால் கலெக்டர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என கூறி கோர்ட்டு உத்தரவின் நகலை கொடுத்து விட்டு சென்றனர்.

தமிழ்மாநில காங்கிரஸ் விவசாய அணியினர் மாநில தலைவர் புலியூர் நாகராஜன் தலைமையில் வந்து கொடுத்த மனுவில் காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடகம் அணை கட்டினால் நாங்கள் ஜல சமாதி அடைவோம். எங்கள் பிணத்தின் மீது தான் கர்நாடகம் அணை கட்ட முடியும் என்று கூறப்பட்டு இருந்தது. நாச்சிக் குறிச்சி ஊராட்சி தீரன் நகரில் உள்ளாட்சி துறை அனுமதி இன்றி உயர் அழுத்த மின் கோபுரம் அமைக்க முயலும் தனியார் நிறுவனத்துக்கு தடை விதிக்கவேண்டும் என தீரன் நகர் தன்னார்வ சமூக நல சங்கத்தினர் மனு கொடுத்தனர்.

இதேபோல் மணப்பாறை அருகே உள்ள வடுகப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர்கள் குடியிருப்பு வீடுகளுக்கு பட்டா கேட்டு மனு கொடுத்தனர்.

Next Story