வளசரவாக்கத்தில் போதையில் போலீஸ்காரரை தாக்க முயன்ற 3 பேர் கைது


வளசரவாக்கத்தில் போதையில் போலீஸ்காரரை தாக்க முயன்ற 3 பேர் கைது
x
தினத்தந்தி 10 Dec 2018 10:45 PM GMT (Updated: 10 Dec 2018 9:33 PM GMT)

வளசரவாக்கத்தில் போதையில் போலீஸ்காரரை தாக்க முயன்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

பூந்தமல்லி,

சென்னை வளசரவாக்கம் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்து வருபவர் திலகர்பாபு (வயது 38). இவர் நேற்று முன்தினம் இரவு வளசரவாக்கம், சவுத்ரி நகரில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டு இருந்தார். அந்த வழியே மோட்டார்சைக்கிளில் வந்த வாலிபரை மடக்கி விசாரணை செய்தபோது அவர் மதுபோதையில் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து ‘‘மதுபோதையில் வாகனம் ஓட்டியதால் உங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படுகிறது’’ என போலீஸ்காரர் திலகர்பாபு, வாலிபரிடம் தெரிவித்தார். இதனால் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அந்த வாலிபர் செல்போனில் தனது நண்பர்களை தொடர்புகொண்டு அங்கு வரும்படி கூறினார்.

அந்த நபரின் நண்பர்கள் 2 பேர் மதுபோதையில் அங்கு வந்து போலீஸ்காரர் திலகர்பாபுவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவரிடம் தகராறில் ஈடுபட்ட 3 பேரும், திகலர்பாபுவின் சட்டையை பிடித்து இழுத்து தாக்க முயன்றனர்.

இதில் திலகர்பாபுவின் சட்டை கிழிந்தது. இதுகுறித்து ரோந்து பணியில் இருந்த போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அங்கு வந்த போலீசார் வாலிபர்களை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில் அவர்கள் போரூர், சேக்மான்யத்தை சேர்ந்த பீட்டர் (26), தேவராஜ் (26), பிரபாகரன் (27) என்பது தெரியவந்தது. அவர்கள் மதுபோதையில் போலீஸ்காரரை தாக்க முயன்றது உறுதி செய்யப்பட்டது.

தொடர்ந்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். இதன்பின்பு போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்தல், தாக்குதல் நடத்த முயற்சி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் ஜெயிலில் அடைத்தனர்.


Next Story