மாநில அரசுக்கு எதிராக ஊர்வலம் நடத்திய எடியூரப்பாவின் வீட்டை முற்றுகையிட்டு காங்கிரசார் போராட்டம்


மாநில அரசுக்கு எதிராக ஊர்வலம் நடத்திய எடியூரப்பாவின் வீட்டை முற்றுகையிட்டு காங்கிரசார் போராட்டம்
x
தினத்தந்தி 11 Dec 2018 4:15 AM IST (Updated: 11 Dec 2018 3:39 AM IST)
t-max-icont-min-icon

பெலகாவியில், விவசாயிகளை திரட்டி மாநில அரசுக்கு எதிராக ஊர்வலம் நடத்தி போராட்டத்தில் ஈடுபட்ட எடியூரப்பாவின் வீட்டை காங்கிரசார் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சிகாரிப்புராவில் பரபரப்பு ஏற்பட்டது.

சிவமொக்கா,

கரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகளிடம் இருந்து நிலுவைத்தொகையை உடனடியாக பெற்றுக் கொடுக்க வேண்டும், விவசாயக்கடன்களை உடனடியாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பா.ஜனதா மாநில தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான எடியூரப்பா நேற்று பெலகாவியில் போராட்டம் நடத்தினார். அவரது தலைமையில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் மாநில அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியபடி ஊர்வலமாக சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதை கண்டித்து நேற்று சிவமொக்கா மாவட்டம் சிகாரிப்புராவில் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் சிகாரிப்புராவில் உள்ள தாலுகா அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு எடியூரப்பாவின் வீட்டிற்கு சென்றனர். அங்கு எடியூரப்பாவின் வீட்டை முற்றுகையிட்டு அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் எடியூரப்பாவுக்கு எதிராக அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.

இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை அங்கிருந்து கலைந்து செல்லும்படி அறிவுறுத்தினர். அதையடுத்து அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு சிகாரிப்புரா பஸ் நிலையத்திற்கு சென்றனர். அங்கு எடியூரப்பாவை கண்டித்து சாலைமறியல் போராட்டம் நடத்தினர். பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

எடியூரப்பாவை கண்டித்து காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சியினர் போராட்டம் நடத்தியதால் நேற்று சிகாரிப்புராவில் பர பரப்பு ஏற்பட்டது.

Next Story