ஜவுளிக்கடையில் திருடிய கேரள வாலிபர்கள் கைது
புதுவையில் ஜவுளிக்கடையில் திருடிய கேரள வாலிபர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி,
புதுச்சேரி திருமலை நகரைச் சேர்ந்தவர் இளவரசன்(வயது 28). காந்திவீதியில் ஆண்களுக்கான ஆடைகள் விற்பனை கடை வைத்துள்ளார். இவர் கடந்த 8–ந் தேதி இரவு வழக்கம் போல் வியாபாரத்தை முடித்து விட்டு கடையை பூட்டி விட்டுச் சென்றார். மறுநாள் காலை கடையை திறந்தபோது கடைக்குள் துணிகள் சிதறி கிடந்தன.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது கடையில் இருந்து ரூ.25 ஆயிரம் மதிப்பிலான துணிகள் மற்றும் கல்லா பெட்டியில் இருந்த ரூ.1,500 பணம் திருடு போயிருப்பது தெரியவந்தது.
இது குறித்து ஒதியஞ்சாலை போலீசில் அவர் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் கீர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது 2 வாலிபர்கள் கடைக்கு அருகில் உள்ள மரத்தில் ஏறி சென்று கடையின் பக்கவாட்டில் சுவரில் உள்ள கண்ணாடியை உடைத்து உள்ளே புகுந்து துணிகளை திருடிச் சென்றது தெரியவந்தது. அவர்களை போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.
இதற்கிடையே நேற்று முன்தினம் காலை 2 வாலிபர்கள் புதுச்சேரி ரெயில்நிலையம் அருகே துணிமூட்டைகளுடன் செல்வது தெரியவந்தது. உடனே போலீசார் அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்த சேவியர்அஜய் (20), பெஞ்சமின் ஜோசப் (18) என்பதும் அவர்கள் தான் இளவரசனின் துணிக்கடையை உடைத்து திருடிச்சென்றது என்பதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து 2 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து துணிகள், பணத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்கள் 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.