தடைகளை மீறி ஜனவரி முதல் மீண்டும் இலவச அரிசி அமைச்சர் கந்தசாமி அறிவிப்பு


தடைகளை மீறி ஜனவரி முதல் மீண்டும் இலவச அரிசி அமைச்சர் கந்தசாமி அறிவிப்பு
x
தினத்தந்தி 10 Dec 2018 11:18 PM GMT (Updated: 10 Dec 2018 11:18 PM GMT)

தடைகளை மீறி ரே‌ஷன் கடைகள் மூலம் வருகிற ஜனவரி மாதம் முதல் மீண்டும் இலவச அரிசி வழங்கப்படும் என்று அமைச்சர் கந்தசாமி தெரிவித்தார்.

வில்லியனூர்,

புதுவை மாநிலம் ஊசுடு தொகுதியை சேர்ந்த பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா பத்துக்கண்ணு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்றது. விழாவில் அமைச்சர் கந்தசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:–

மத்திய அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். கருப்பு பணத்தை மீட்டு ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் செலுத்துவோம் என்றார்கள். ஆனால் 15 பைசா கூட வரவில்லை. பொய்யான திட்டங்களை சொல்லி மத்திய அரசு மக்களை ஏமாற்றி விட்டது.

தற்போது நான் 3–வது முறையாக அமைச்சராக உள்ளேன். ரங்கசாமி முதல்–அமைச்சராக இருந்தபோது மாநிலத்தில் நிலைய நிதி இருந்தது. 2008–ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வந்த திட்டத்தின்படி நாம் நினைப்பதை போல் வங்கியில் நிறைய கடனை பெற்று மக்களுக்கு அதிக திட்டங்களை செய்தோம். இவ்வாறு பெற்ற கடன்களுக்கு 10 ஆண்டுகளுக்கு பிறகு ரூ.300 கோடி, ரூ.500 கோடி, ரூ.1000 கோடி என வட்டி செலுத்தி வருகிறோம்.

முதல்–அமைச்சராக நாராயணசாமி பொறுப்பேற்ற பிறகு 3 தவணையாக வட்டி செலுத்தி இருக்கிறோம். நமது மாநிலத்துக்கு வரும் வருவாயில் அரசு ஊழியர்களுக்கு 7–வது ஊதியக்குழு உயர்வுக்கு ரூ.500 கோடி கொடுத்துள்ளோம். மத்தியில் காங்கிரஸ் அரசு இருந்தபோது நமக்கு 90 சதவீதம் மானியம் கொடுத்தார்கள். தற்போது மோடி அரசாங்கம் 25 சதவீத மானியம் மட்டுமே கொடுக்கிறது. இதனால் பொதுத்துறை நிறுவனங்களை சேர்ந்த 15 ஆயிரம் ஊழியர்களுக்கு சம்பளம் இல்லை. இதை மேலே இருப்பவர்களிடம் கூறினால், 15 ஆயிரம் ஊழியர்களையும் வீட்டுக்கு அனுப்புங்கள் என்று கூறுகிறார்கள்.

இலவச அரிசி வழங்கும் திட்டத்தை தடுக்கிறார்கள். இருந்தாலும் பயனாளிகளுக்கு 2 மாத அரிசிக்கான தொகை வங்கியில் செலுத்தியுள்ளோம். தடைகளை மீறி ரே‌ஷன் கடைகள் மூலம் ஜனவரி மாதத்தில் முதல் இலவச அரிசி வழங்கப்படும். ஆதிதிராவிடர்கள் இறந்தால் உடனே ரூ.15 ஆயிரம் கொடுப்பதுபோல், மற்ற சமுதாயத்தினருக்கும் 10 ஆயிரம் ரூபாய் கொடுக்க உள்ளோம். இன்னும் 5 மாதங்களில் சோதனை காலம் முடிவுக்கு வரும்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story