டோம்பிவிலியில் பெண் கொலை; உடன் வசித்து வந்த வாலிபருக்கு வலைவீச்சு
டோம்பிவிலியில் இளம்பெண்ணை கொலை செய்ததாக அவருடன் வசித்து வந்த வாலிபரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
அம்பர்நாத்,
தானே மாவட்டம் டோம்பிவிலி மான்பாடாவை சேர்ந்த இளம்பெண் ஜெயஸ்ரீ (வயது26). திருமணமான இவர், 2 ஆண்டுகளுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக தனது கணவரை பிரிந்தார்.
பின்னர் ஜிஜேந்திரா சக்பால் (30) என்பவருடன் திருமணம் செய்து கொள்ளாமல் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்தார். அண்மையில் இருவருக்கும் இடையே சண்டை உண்டானது. இதில் அவரை ஜிஜேந்திரா சக்பால் தாக்கியுள்ளார்.
இதுபற்றி அந்த பெண் மான்பாடா போலீசில் புகார் கொடுத்தார். இதன்பேரில் போலீசார் ஜிஜேந்திரா சக்பாலை போலீஸ் நிலையம் அழைத்து எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
இந்தநிலையில், நேற்றுமுன்தினம் அவர்களது வீட்டில் இருந்து சகிக்க முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசியது. இதுபற்றி பக்கத்து வீட்டுக்காரர்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து வெளிப்பக்கமாக பூட்டியிருந்த வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.
அப்போது, ஜெயஸ்ரீ அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டு இருந்தது தெரியவந்தது. போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.
அப்போது அவருடன் வசித்து வந்த ஜிஜேந்திரா சக்பால் தலைமறைவானது தெரியவந்தது. இதன் மூலம் அவர் தான் ஜெயஸ்ரீயை கொன்று விட்டு தப்பிஓடி இருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள்.
மேலும் இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜிஜேந்திரா சக்பாலை வலைவீசி தேடிவருகின்றனர்.