வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில் மராத்தா இடஒதுக்கீட்டின் கீழ் வேலை வழங்குவதா? அரசுக்கு, ஐகோர்ட்டு கண்டனம்
வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில் மராத்தா இடஒதுக்கீட்டின் கீழ் வேலைவாய்ப்பு வழங்க முடிவு செய்த அரசுக்கு ஐகோர்ட்டு கண்டனம் தெரிவித்தது.
மும்பை,
மராத்தா சமுதாயத்தினர் நீண்டகாலமாக கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் தங்களுக்கு 16 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர். கடந்த சட்டசபை கூட்டத்தொடரில் இதற்கான மசோதா நிறைவேற்றப்பட்டது.
ஆனால் இந்த இடஒதுக்கீட்டை எதிர்த்து மும்பை ஐகோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் நேற்று ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.
இந்தநிலையில் பொதுப்பணி துறை சார்பில் புதிய வேலைவாய்ப்பிற்காக விளம்பரம் வெளியிடப்பட்டது. இதற்கான விண்ணப்பத்தில் மராத்தா சமுதாயத்தினருக்கு புதிதாக இடஒதுக்கீடு வழங்கப்பட்டதன் பேரில் சமூக மற்றும் பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்டோர் என்ற பிரிவும் சேர்க்கப்பட்டு இருந்தது.
இதை நேற்றைய வழக்கு விசாரணையின்போது, மராத்தா இடஒதுக்கீட்டிற்கு எதிராக ஆஜரான வக்கீல் குணரத்ன சடவர்தே சுட்டிக்காட்டினார். அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள் நரேந்திர பாட்டீல், கார்னிக் ஆகியோர் அரசுக்கு கண்டனம் தெரிவித்தனர். அவர்கள் கூறியதாவது:-
அரசு ஏன் இந்த விளம்பரத்தை வெளியிட இவ்வளவு அவசரம் காட்டவேண்டும். அரசுக்கு இடஒதுக்கீடு தொடர்பான மனுக்கள் இன்று விசாரணைக்கு வரும் என்பது நன்றாக தெரியும். எனவே அரசு இதுபோன்ற விளம்பரத்தை வெளியிட மேலும் சிறிது நாட்கள் காத்திருந்திருக்க வேண்டும்.
இது லட்சக்கணக்கான மக்களை பாதிக்கும் பிரச்சினையாகும். இதில் அப்படிப்பட்ட தேவையற்ற குழப்பமான சூழ்நிலைகளை தவிர்க்கவேண்டும். மேலும் மனுக்களை விசாரிக்க கோர்ட்டிற்கு மூச்சுவிடும் அவகாசமாவது அரசு வழங்கவேண்டும்.
இந்த வழக்கு கோர்ட்டில் இருப்பதை அறியாமல் பலர் இந்த வேலைக்காக விண்ணப்பித்திருப்பார்கள். நாங்கள் இளைஞர்கள் வேலைக்காக விண்ணப்பம் செய்துவிட்டு காத்துக்கிடப்பதை விரும்பவில்லை.
இ்வ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.