ஆந்திராவில் திருடுபோன நகைகள் குறித்து ராமநாதபுரம் நகைக்கடை உரிமையாளரிடம் விசாரணை
ஆந்திராவில் திருடு போன நகைகள் குறித்து அந்த மாநில போலீசார் ராமநாதபுரம் நகைக்கடை உரிமையாளரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
ராமநாதபுரம்,
ஆந்திரா மாநிலம் மேற்கு கோதாவரி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்டது தாதேபள்ளிகுடம். இந்த பகுதியில் நடைபெற்ற திருட்டு வழக்கு ஒன்றில் ஊட்டி கூடலூரை சேர்ந்த மகேஷ் என்பவரின் மகன் மகேஷ் மணிகண்டன்(வயது 38) என்பவர் கைதாகி உள்ளார். இவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஆந்திராவின் பல்வேறு பகுதிகளில் திருட்டு, வழிப்பறி போன்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டிருப்பதும், இவர் மீது 17 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதும் போலீசாருக்கு தெரியவந்துள்ளது.
இவரிடம் நடத்திய தொடர் விசாரணையில் திருடப்பட்ட நகைகளை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள நகைக்கடைகளில் விற்பனை செய்திருப்பதாக தெரிவித்துள்ளார். குறிப்பாக ராமநாதபுரம் நகரில் ஒரு நகைக்கடையில் திருட்டு நகைகளை விற்பனை செய்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
அதைத்தொடர்ந்து தாதேபள்ளிகுடம் பகுதி போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ஸ்ரீனு தலைமையில் தனிப்படை போலீசார் நேற்று ராமநாதபுரம் வந்தனர். மகேஷ் மணிகண்டனை அழைத்து வந்து ராமநாதபுரம் நகரில் திருட்டு நகைகளை கொடுத்த நபர் குறித்து விசாரித்துள்ளனர்.
அதில் ராமநாதபுரம் நகரில் நகைக்கடை வைத்துள்ள சாந்தமூர்த்தி (வயது 45) என்பவரிடம் திருட்டு நகைகள் கொடுத்ததாக தெரிவித்ததை தொடர்ந்து அவரிடம் ஆந்திர போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில் சாந்தமூர்த்தி நகைகள் குறித்து தகவல் தெரிவிக்காததோடு மறுத்ததாகவும் கூறப்படுகிறது. அதைத்தொடர்ந்து ஆந்திர போலீசார் விசாரணைக்காக சாந்தமூர்த்தியை ஆந்திராவிற்கு அழைத்து சென்றுள்ளனர்.