இருவேறு விபத்துகளில் 2 பேர் சாவு
இருவேறு விபத்துகளில் 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
திருத்தணி,
திருத்தணிஅருகே உள்ள சத்ரம்ஜெயபுரத்தை சேர்ந்தவர் லோகநாதன் (வயது 42). இவர் திருத்தணியில் உள்ள தனியார் ஏற்றுமதி நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் லோகநாதன் தன்னுடைய மோட்டார் சைக்கிளில் வீட்டில் இருந்து திருத்தணிக்கு வந்து கொண்டிருந்தார். அவர் திருத்தணி நாகராஜபுரம் நெடுஞ்சாலையில் நல்லாட்டூர் கூட்ரோடு அருகே வரும் போது திடீரென அவரது மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறியதால் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.
இதை பார்த்தவர்கள் உடனடியாக அவரை திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து திருத்தணி போலீஸ் இன்ஸ்பெக்டர் பரந்தாமன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
காஞ்சீபுரத்தை அடுத்த திம்மசமுத்திரத்தை சேர்ந்தவர் பாளையம் (65). கூலித்தொழிலாளி. காஞ்சீபுரத்தை அடுத்த சென்னை– பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை வெள்ளைகேட் என்ற இடத்தில், சாலை ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் பாளையம் மீது மோதியது.
இதில், அதே இடத்தில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து காஞ்சீபுரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.