ஆட்டோவில் சென்ற துணி வியாபாரியிடம் ரூ.3 லட்சம் திருட்டு
ஆட்டோவில் சென்ற துணி வியாபாரியிடம் ரூ.3 லட்சத்தை திருடிய டிரைவர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
மும்பை,
மும்பை காந்திவிலியை சேர்ந்தவர் கோபால் கர்க்(வயது 51). துணி வியாபாரி. இவர் சம்பவத்தன்று இரவு காந்திவிலி ரெயில் நிலையத்தில் இருந்து வீட்டிற்கு செல்வதற்காக அமர் மாலி (22) என்பவரது ஷேர் ஆட்டோவில் ஏறினார். அப்போது கையில் ரூ.3 லட்சம் வைத்திருந்தார். அவர் ஆட்டோ டிரைவரின் அருகில் அமர்ந்து பயணம் செய்தார். ஆட்டோ ஓட்ட இடையூராக இருப்பதாக கூறி, டிரைவர் அவரது கையில் இருந்த பணப்பையை இருக்கையில் வைக்கும்படி கூறினார். அவரும் அந்த பையை இருக்கையில் வைத்தார்.
ஆட்டோ அப்பகுதியில் உள்ள தனியார் கல்லூாி அருகே நின்ற போது, பின் இருக்கையில் இருந்த 3 பேர் திடீரென கோபால் கர்கின் பையை எடுத்து கொண்டு தப்பி ஓடினார்கள். இதை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார்.
இதையடுத்து அவர் ஆட்டோ டிரைவருடன் சேர்ந்து காந்திவிலி போலீஸ் நிலையம் சென்று புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்தநிலையில் போலீசாருக்கு ஆட்டோ டிரைவர் மீது சந்தேகம் ஏற்பட்டது.
எனவே அவரை பிடித்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். இதில், அவருக்கு தொடர்பு இருப்பது உறுதிபடுத்தப்பட்டது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.
மேலும் அவர் கொடுத்த தகவலின்பேரில் பணத்தை திருடி கொண்டு ஓடிய அவரது கூட்டாளிகளான சபீர் மாலிக் (20), குர்சித் அன்சாரி (39) மற்றும் அமிர் சேக் (39) ஆகியோரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.3 லட்சத்தையும் போலீசார் மீட்டனர்.
Related Tags :
Next Story