ஆலங்குளத்தில் திருடு போன தனியார் கல்லூரி பஸ் மீட்பு; 8 பேர் கைது
ஆலங்குளத்தில் தனியார் கல்லூரி பஸ்சை திருடிய வழக்கில் 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஆலங்குளம்,
ஆலங்குளத்தில் தனியார் கல்லூரி பஸ்சை திருடிய வழக்கில் 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
தனியார் கல்லூரி பஸ் திருட்டுஆலங்குளம் பஸ்நிலையம் மேல்புறம் உள்ள ஆஸ்பத்திரியின் அருகில் தென்காசியை சேர்ந்த தனியார் கல்லூரி பஸ்சை நிறுத்தி வைப்பது வழக்கம். இந்நிலையில் இந்த பஸ்சை கடந்த 8–ந் தேதி மதியம் பஸ் டிரைவரான ஆலங்குளம் அருந்ததியர் தெருவை சேர்ந்த வீரணன் மகன் காமராஜ் நிறுத்திச் சென்றார். பின்னர் விடுமுறை முடிந்து 10–ந் தேதி காலை மீண்டும் பஸ்சை எடுக்க சென்றபோது பஸ்சை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் இதுகுறித்து ஆலங்குளம் போலீசில் புகார் செய்தார்.
இதுகுறித்து ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பஸ்சில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்டிருந்ததால், அதனை இணையதளம் மூலம் இன்ஸ்பெக்டர் அய்யப்பன் ஆய்வு செய்தார். இதில், பஸ் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருப்பது தெரியவந்தது. பின்னர் பஸ்சை மீட்பதற்காக கன்னியாகுமரி மாவட்டத்திற்கு போலீசார் விரைந்தனர். அங்குள்ள போலீசாருடன் இணைந்து, திருடப்பட்ட பஸ் நிற்கும் இடத்துக்கு சென்றனர். அப்போது அங்கு பஸ்சின் பாகங்களை பிரித்து கொண்டிருந்த கும்பல், போலீசாரை பார்த்ததும் தப்பி ஓடியது. பின்னர் அந்த பஸ்சை போலீசார் மீட்டு ஆலங்குளத்துக்கு கொண்டு வந்தனர்.
8 பேர் கைதுஇதுதொடர்பாக நடத்திய விசாரணையில், கருத்தப்பிள்ளையூர் அந்தோணியார் கோவில் வடக்கு தெருவை சேர்ந்த பிரான்சிஸ் மிக்கேல் (வயது 52), இருதயராஜ் மகன் ஜெயக்குமார், ஞானமுத்து மகன் ஜான்வின்சென்ட் (35), புலவன்குடியிருப்பை சேர்ந்த கனகராஜ் மகன் செந்தில்குமார் (35), களக்காடு சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த நடராஜன் மகன் மகாராஜன் (34), மாடசாமி மகன் மணிகண்ட சரவணன் என்ற கடுக்கன், பனையடிப்பட்டி மாடசாமி கோவில் தெருவை சேர்ந்த சுடலை மகன் சண்முகநாதன், வட்டாலுர் ராமர் கோவில் தெருவை சேர்ந்த அருணாச்சலம் மகன் கடல்மணி என்ற கடற்கரை ஆகியோர் பஸ்சை திருடியது தெரியவந்தது.
அவர்களை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பஸ்சில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்டிருந்ததால், அதன் மூலம் பஸ்சை எளிதாக மீட்க முடிந்தது என்று போலீசார் தெரிவித்தனர். ஆலங்குளத்தில் தனியார் கல்லூரி பஸ் திருடு போன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.