கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி போட லஞ்சம்: நர்சை சிறைபிடித்து மறியல்


கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி போட லஞ்சம்: நர்சை சிறைபிடித்து மறியல்
x
தினத்தந்தி 13 Dec 2018 4:15 AM IST (Updated: 12 Dec 2018 10:25 PM IST)
t-max-icont-min-icon

மீஞ்சூரை அடுத்த நாலூர் கிராமத்தில் கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி போட லஞ்சம் கேட்ட நர்சை பொதுமக்கள் சிறைபிடித்து சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மீஞ்சூர்,

தமிழக அரசின் சுகாதார நலப்பணிகள் துறையின் கீழ் ஆரம்ப சுகாதார நிலையங்கள் இயங்குகின்றன. இந்த துறையில் கிராம புறங்களில் உள்ள ஏழை கர்ப்பிணிகளுக்கும், பொதுமக்களுக்கும் பல்வேறு நலத்திட்ட பணிகள் செய்யப்பட்டு வருகிறது.

பொதுமக்களுக்கு தேவையான மருத்துவம், கர்ப்பிணிகளுக்கு, கருவுற்ற காலத்தில் இருந்து ஊட்டச்சத்து மாத்திரைகள், சமுதாய வளைகாப்பு, கர்ப்பிணிகளுக்கு அரசு நிதிஉதவி செய்து வருகின்றன.

குழந்தைகளுக்கு 16 வகையான பொருட்கள், தடுப்பூசிகள் உள்பட பல்வேறு உதவிகளை தமிழக அரசு இலவசமாக செய்து வருவதுடன் கிராம புறங்களில் வீடு, வீடாக சென்று கர்ப்பிணிகளுக்கு மருந்து, மாத்திரைகள், தடுப்பூசி போடும் பணியினை கிராம நர்சுகள் செய்து வருகின்றனர்.

மீஞ்சூர் ஒன்றிய தலைமை ஆரம்ப சுகாதார மையத்தின் கீழ் நாலூர் கிராமத்திற்கு தங்கரத்தினம் (வயது 57) என்ற நர்சு சுகாதார நலப்பணிகளை செய்து வந்தார். அப்போது மருந்து மாத்திரைகள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசிகள் போடுவதற்கு ரூ.1,000 முதல் ரூ.2,000 வரை லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று பிற்பகலில் நாலூர் ஊராட்சியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டனர்.

அப்போது நர்சுக்கு பணம் கொடுத்தால் மட்டுமே மருந்து மாத்திரைகள் வழங்கப்படுகிறது. ஊசி போடப்படும் என தெரிவித்ததை கண்டித்து நர்சு தங்கரத்தினத்தை பொதுமக்கள் சிறைபிடித்து திருவொற்றியூர்-பொன்னேரி நெடுஞ்சாை-லியல் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தால் 100-க்கும் மேற்பட்ட வாகனங்கள் சாலையில் நின்றதால், 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த மீஞ்சூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ரஞ்சித்குமார், பீமன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

மீஞ்சூர் ஒன்றிய ஆரம்ப சுகாதார நிலையங்களின் மருத்துவ அலுவலர் ராஜேஷ், அலுவலர் பாலகிருஷ்ணன், கிராம நிர்வாக அலுவலர் சகாயநிர்மலா ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது கர்ப்பிணிகள் மற்றும் பொதுமக்கள் லஞ்சம் கேட்ட நர்சை உடனடியாக மாற்றவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

இதனையடுத்து மருத்துவ அலுவலர் ராஜேஷ், திருவள்ளூர் மாவட்ட சுகாதார நலப்பணிகள் துணை இயக்குனர் கிருஷ்ணராஜிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நாலூரில் நடந்த சம்பவங்களை தெரிவித்தனர்.

இந்த நிலையில் உடனடியாக அத்தமனஞ்சேரி ரெட்டிபாளையம் பகுதிக்கு பணியிட மாற்றம் செய்தார். பின்னர் வருகிற வெள்ளிக்கிழமை 11 மணிக்கு மாவட்ட தாய் சேய் நல அலுவலர் நாலூர் கிராமத்தில் விசாரணை நடத்த உத்தரவிட்டதாக மருத்துவ அலுவலர் டாக்டர் ராஜேஷ் தெரிவித்தார்.

இதையடுத்து பொதுமக்களால் சிறை பிடித்து வைக்கப்பட்டிருந்த நர்சை போலீசார் மீட்டு பாதுகாப்பாக ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவத்தால் நாலூர் மற்றும் மீஞ்சூர் பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

Next Story