காவிரி ஆற்றின் குறுக்கே ரூ.135 கோடியில் உயர்மட்ட பாலம் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தகவல்


காவிரி ஆற்றின் குறுக்கே ரூ.135 கோடியில் உயர்மட்ட பாலம் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தகவல்
x
தினத்தந்தி 12 Dec 2018 11:00 PM GMT (Updated: 12 Dec 2018 7:56 PM GMT)

காவிரி ஆற்றின் குறுக்கே ரூ.135 கோடியில் உயர்மட்ட பாலம் அமைய உள்ளது என அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறினார்.

கரூர்,

கரூர் மாவட்டம், நெரூர் காவிரி ஆற்றின் குறுக்கே ரூ.135 கோடியில் உயர்மட்ட பாலம் அமைய உள்ள இடத்தை ஆய்வு செய்யும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் அன்பழகன் தலைமை தாங்கினார். இதில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்து கொண்டு, பாலம் அமையவுள்ள இடத்தை ஆய்வு செய்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

கரூர் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, கரூர் மாவட்டம் நெரூர் திருச்சி மாவட்டம் உன்னியூர் இடையே காவிரி ஆற்றின் குறுக்கே, அணுகுசாலையுடன் சுமார் ரூ.135 கோடி மதிப்பில் உயர்மட்ட பாலம் அமைப்பதற்காக திட்ட வரைவுகள் அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

நிலம் கையகப்படுத்தும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து உயர்மட்ட பாலப்பணி முடிவுற்ற பின் கரூரிலிருந்து சென்னை செல்வோருக்கு மிகுந்த வசதியாகவும், பயண தூரமும் குறைவாக இருக்கும். ஏற்கனவே அமைத்த வாங்கல்-மோகனூர் பாலம் பொதுமக்களுக்கு பயனுள்ளதாக உள்ளது. அதேபோல் மாயனூர் கதவணையில் இருந்து திருச்சி சாலை வரை புதிதாக சாலை அமைக்க ரூ.7 கோடி மதிப்பில் ஒப்பந்தங்கள் விடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின்போது மாவட்ட வருவாய் அதிகாரி சூர்யபிரகாஷ், வருவாய் கோட்டாட்சியர் சரவணமூர்த்தி, திருச்சி நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் சீனிவாசராகவன், வட்டாட்சியர் ரவிகுமார், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் காளியப்பன், திருவிக, கமலக்கண்ணன், கிருஷ்ணன், அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story