சூலூரில் அடுத்தடுத்து: 3 கோவில்களின் பூட்டை உடைத்து கொள்ளை - தொடர் சம்பவத்தால் பக்தர்கள் அதிர்ச்சி
கோவையை அடுத்த சூலூரில் அடுத்தடுத்து 3 கோவில்களின் பூட்டை உடைத்து மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்றனர். இதனால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சூலூர்,
கோவை மாவட்டம் சூலூர் செங்கத்துரை பகுதியில் பழமை வாய்ந்த மாகாளியம்மன் கோவில் உள்ளது. இதன் அருகில் பெருமாள் கோவில் மற்றும் அங்காளம்மன் கோவில்கள் அடுத்தடுத்து அமைந்துள்ளன. இந்தநிலையில் 3 கோவில்களிலும் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் பூஜை முடிந்ததும் பூசாரிகள் கதவை பூட்டி விட்டு சென்று விட்டனர்.
நேற்று அதிகாலை மீண்டும் அவர்கள் கோவிலுக்கு சென்றபோது 3 கோவில்களின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உடனே உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் இதுகுறித்து கோவில் நிர்வாகத்திற்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். இதைதொடர்ந்து சூலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
பெருமாள் கோவிலில் இருந்த ¾ கிலோ வெள்ளி கிரீடங்கள், 2 கிராம் தங்கத்தாலி பொட்டு, அங்காளம்மன் கோவிலில் சாமிக்கு அணிவிக்கப்பட்டு இருந்த 5 பவுன் ஆரம், ஒரு பவுன் தங்க பொட்டு தாலி கொள்ளையடிக்கப்பட்டது. மேலும் கோவில் உள் அறையில் இருந்த உண்டியலை திருடி அதில் இருந்த சுமார் ரூ.50 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு காலி உண்டியலை அருகில் உள்ள அரசு பள்ளி மைதானத்தில் வீசி சென்றுள்ளனர்.
மாகாளி அம்மன் கோவிலில் இருந்த 3 கிராம் தாலி பொட்டை மர்ம ஆசாமிகள் எடுத்து சென்றனர். மேலும் அங்கு இருந்த பீரோவை உடைத்து அதில் ஏதாவது இருக்கிறதா என்று பார்த்துள்ளனர். அதில் ஒன்றும் இல்லாததால் அங்கு இருந்த பட்டு துணிகளை கலைத்து விட்டு, ஆங்காங்கே வீசிவிட்டு சென்றுள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கொள்ளையடித்து சென்ற மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.
கொள்ளை சம்பவம் குறித்து பொதுமக்கள் கூறியதாவது:- சூலூர் வட்டார பகுதிகளில் உள்ள கோவில்களில் கடந்த சில மாதங்களாகவே மர்ம ஆசாமிகள் கோவில் கதவை உடைத்து சாமி சிலைகள், வெள்ளி அணிகலன்கள், தங்கத்தாலி பொட்டுகள், தட்டு காசுகள், பாத்திரங்கள், உண்டியல் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து செல்வது வாடிக்கையாக உள்ளது.
குறிப்பாக கண்ணம்பாளையம், கலங்கல், பாப்பம்பட்டி, காங்கேயம்பாளையம், நடுப்பாளையம் ஆகிய பகுதிகளில் அடிக்கடி கோவில்களில் கொள்ளை நடைபெறுகிறது. இந்த தொடர் சம்பவங்களால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்து உள்ளனர். இதை தடுக்க போலீசார் ரோந்து பணிகளை அதிகப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இந்தநிலையில், கோவை சரக டி.ஐ.ஜி. கார்த்திகேயன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன் ஆகியோர் தலைமையில் சூலூர் காவல் நிலையத்தில் நேற்று நடந்த ஆய்வுக்கூட்டத்தில் தொடர் கொள்ளை சம்பவம் குறித்து விவாதிக்கப்பட்டது. பின்னர் போலீஸ் சூப்பிரண்டு கூறுகையில், சூலூர் பகுதியில் கோவில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் விரைவில் பிடிபடுவார்கள். அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
Related Tags :
Next Story