புயல் பாதிப்பை முறையாக கணக்கெடுக்காத அதிகாரிகளை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்


புயல் பாதிப்பை முறையாக கணக்கெடுக்காத அதிகாரிகளை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 12 Dec 2018 10:45 PM GMT (Updated: 12 Dec 2018 8:50 PM GMT)

புயல் பாதிப்பை முறையாக கணக்கெடுக்காத அதிகாரிகளை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேராவூரணி,

‘கஜா’ புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றான பேராவூரணி பகுதியில் நிவாரண பணிகள் நடைபெற்று வருகின்றன. அரசால் அறிவிக்கப்பட்ட நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதில் பாரபட்சம் காட்டப்படுவதாகவும், புயல் பாதிப்புகள் தொடர்பான கணக்கெடுப்பு பணிகளை அதிகாரிகள் முறையாக மேற்கொள்ளவில்லை என்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள்.

இந்த நிலையில் பேராவூரணி அருகே சொர்ணக்காடு கிராமத்தில் புயலால் பாதிக்கப்பட்ட 400-க்கும் மேற்பட்ட குடும்பங்களில் 200 குடும்பங்களுக்கு மட்டுமே நிவாரண பொருட்கள் அடங்கிய பெட்டகம் வரவழைக்கப்பட்டதாக தெரிகிறது.

இதனால் அதிருப்தியடைந்த, சொர்ணக்காடு கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் பேராவூரணி-அறந்தாங்கி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது புயல் சேத விவரங்களை முறையாக கணக்கெடுக்காத அதிகாரிகளை கண்டித்து கோஷம் எழுப்பினர். இதுகுறித்து தகவல் அறிந்த வருவாய் அதிகாரிகள் கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு கிராம மக்கள் கலைந்து சென்றனர். சாலை மறியல் காரணமாக அங்கு 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதேபோல் பேராவூரணி பேரூராட்சி 2-வது வார்டு பகுதியை சேர்ந்த பொதுமக்களுக்கு நிவாரண பொருட்களை முறையாக வினியோகம் செய்யாததை கண்டித்தும், அதிகாரிகள் முறையாக கணக்கெடுக்காததை கண்டித்தும் அப்பகுதி பொதுமக்கள் பேராவூரணி-பட்டுக்கோட்டை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் சாலை மறியல் கைவிடப்பட்டது. மறியல் காரணமாக அங்கு 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப் பட்டது. 

Next Story