ஈரோடு அரசு போக்குவரத்துக்கழக அலுவலகத்துக்கு விடுமுறை கேட்க குடும்பத்துடன் ஆம்புலன்சில் வந்த டிரைவர்
விடுமுறை கேட்க ஈரோடு அரசு போக்குவரத்துக்கழக அலுவலகத்துக்கு ஆம்புலன்சில் குடும்பத்துடன் டிரைவர் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு,
ஈரோடு மாவட்டம் கஸ்பாபேட்டை பகுதியை சேர்ந்தவர் பாபு (வயது 35). இவருடைய மனைவி அன்னக்கொடி. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். அரசு போக்குவரத்துக்கழக ஈரோடு கிளையில் பாபு டிரைவராக பணியாற்றி வருகிறார். அவர் ஈரோடு–திருப்பூர் வழித்தடத்தில் செல்லும் அரசு பஸ்சில் டிரைவராக உள்ளார்.
இந்தநிலையில் பாபுவுக்கு நேற்று முன்தினம் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அதன்பின்னர் அவர் முள்ளாம்பரப்பில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதனால் அன்னக்கொடி அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிக்கு செல்போனில் தொடர்பு கொண்டு, தனது கணவர் உடல்நிலை குறைவாக இருப்பதால் விடுப்பு அளிக்கும்படி கேட்டுக்கொண்டார். அதற்கு அவர் விடுப்பு கொடுக்க முடியாது என்று சொன்னதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் நேற்று காலை பாபு, ஆஸ்பத்திரியில் இருந்து ஈரோடு சென்னிமலைரோட்டில் உள்ள அரசு போக்குவரத்துக்கழக மண்டல அலுவலகத்துக்கு தனியார் ஆம்புலன்சில் வந்தார். அவருக்கு உதவியாக அவருடைய குடும்பத்தினரும் வந்தனர். அந்த ஆம்புலன்சை அலுவலகத்தின் காவலாளி நுழைவு வாயிலில் தடுத்து நிறுத்தினார். அதன்பின்னர் பாபுவுடன் பணியாற்றும் டிரைவர்கள், கண்டக்டர்கள் அலுவலகத்திற்குள் சென்று அதிகாரியிடம் பேச்சுவார்த்தை நடத்திவிட்டு வெளியே வந்தனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:–
பாபுவுக்கு உடல்நிலை சரியில்லாததால் விடுப்பு கேட்டு அவருடைய மனைவி, கிளை மேலாளரிடம் செல்போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். ஆனால் அவர் விடுப்பு தர மறுப்பு தெரிவித்ததால், பாபு ஆம்புலன்சில் நேராக வந்து விடுப்பு கேட்டு முறையிட்டார். இதைத்தொடர்ந்து அலுவலகத்தில் உள்ள துணை மேலாளரை சந்தித்து பேசினோம். அப்போது அவர் விடுப்பு கடிதம் எழுதி கொடுக்கும்படி கூறினார். அதன்பின்னர் பாபு விடுப்பு கடிதத்தை எழுதி கொடுத்தார். எனவே விடுப்பு தர மறுத்த அதிகாரியின் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள். விடுப்பு கேட்பதற்காக அரசு பஸ் டிரைவர் பாபு ஆம்புலன்சில் வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.