பட்டாசு தொழிலை பாதுகாக்க தமிழக அரசு மறு சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும்; டாக்டர் கிருஷ்ணசாமி வலியுறுத்தல்


பட்டாசு தொழிலை பாதுகாக்க தமிழக அரசு மறு சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும்; டாக்டர் கிருஷ்ணசாமி வலியுறுத்தல்
x
தினத்தந்தி 13 Dec 2018 5:00 AM IST (Updated: 13 Dec 2018 3:57 AM IST)
t-max-icont-min-icon

பட்டாசு தொழிலை பாதுகாக்க தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி வலியுறுத்தினார்.

விருதுநகர்,

விருதுநகரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர் மேலும் கூறியதாவது:–

தேவேந்திர குல வேளாளரை பட்டியல் இனத்தில் இருந்து நீக்கி இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசு தேவேந்திர குல வேளாளர் என அரசாணை பிறப்பிக்க வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி 14 மாவட்டங்களில் கலெக்டர்களிடம் மனு கொடுக்க முடிவு செய்து இது வரை 7 மாவட்டங்களில் மனுக்கள் கொடுத்து உள்ளோம். 8–வது மாவட்டமாக விருதுநகர் மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளோம். அதிக பட்சமாக விருதுநகர் மாவட்டத்தில்தான் 485 மனுக்கள் கொடுத்துள்ளோம்.

பட்டாசு தொழிலை பாதுகாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சுப்ரீம் கோர்ட்டு கூறிய பசுமை பட்டாசு என்ன என்பது இன்னும் தீர்மானிக்கப்படவே இல்லை. சுப்ரீம் கோர்ட் பட்டாசு வெடிப்பதால் கார்பன் மாசு ஏற்படுகிறது என கருத்து தெரிவித்து உள்ள நிலையில், 5 லட்சம் பட்டாசு தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும். புதிய தமிழகம் கட்சி சார்பில் பட்டாசு தொழிலுக்காக பல்வேறு கால கட்டங்களில் போராட்டங்கள் நடத்தியுள்ளோம். பட்டாசு தொழிலை பாதுகாக்க தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக அவர் கலெக்டர் சிவஞானத்திடம் கோரிக்கைகளை வலியுறுத்தி 485 மனுக்களை வழங்கினார்.


Next Story