மீன்வளத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை: கடலூர் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை


மீன்வளத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை: கடலூர் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை
x
தினத்தந்தி 13 Dec 2018 3:30 AM IST (Updated: 13 Dec 2018 4:06 AM IST)
t-max-icont-min-icon

மீன்வளத்துறை அதிகாரிகளின் எச்சரிக்கையால் கடலூரில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.

கடலூர் முதுநகர், 

கடலூர் துறைமுகத்தில் இருந்து தேவனாம்பட்டினம், சிங்காரத்தோப்பு, சோனாங்குப்பம், அக்கரைக்கோரி, ராசாப்பேட்டை, சித்திரைப்பேட்டை, சொத்திக்குப்பம் உள்ளிட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் 100-க்கும் மேற்பட்ட பைபர் மற்றும் விசை படகுகளில் தினந்தோறும் ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடித்து வருவது வழக்கம்.

இந்த நிலையில் தென்மேற்கு வங்கக்கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, சற்று வலுவடைந்து தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாக மத்திய தெற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இந்திய பெருங்கடல் பகுதியில் நிலவுகிறது. அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், பின்னர் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுவடைந்து தெற்கு ஆந்திரா மற்றும் வட தமிழக கரைப்பகுதியை நோக்கி நகரக்கூடும். இதனால் கடல் காற்று அதிகரிக்கும். கடல் கொந்தளிப்பாக காணப்படும். ஆகவே மீனவர்கள் 2 நாட்களுக்கு மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இதற்கிடையில் கடலூர் மீன்வளத்துறை துணை இயக்குனர் ரேணுகா, உதவி இயக்குனர் கங்காதரன் ஆகியோர் கடலூரில் கடல் சீற்றமாக காணப்படும் என்பதால் மீனவர்கள் அடுத்த அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்லவேண்டாம் என்று தொலைபேசியிலும், வாட்ஸ்-அப் குரூப்பிலும் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து நேற்று காலை விசை படகு மீனவர்கள் பெரும்பாலானோர் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. ஒரு சில பைபர் படகு மீனவர்கள் மட்டும் மீன்பிடிக்க கடலுக்கு சென்று வந்தனர். பெரும்பாலான மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லாததால் அவர்கள் தங்கள் படகுகளை துறைமுகத்திலும், கடற்கரையோரங்களிலும் பாதுகாப்பாக நிறுத்தி வைத்தனர்.

மேலும் நேற்று முன்தினம் ஆழ்கடலுக்கு சென்ற மீனவர்களும் கரைக்கு திரும்பி வர தொடங்கி உள்ளனர். மீன்கள் வரத்து இல்லாததால் துறைமுக பகுதியில் ஆட்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. இதற்கிடையே மீனவர்களுக்கு அடுத்த 2 நாட்களுக்கு மானிய விலையில் வழங்கப்பட்டு வரும் டீசல் வினியோகத்தை நிறுத்தி வைக்க மீன்வளத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Next Story