பணி நிரந்தரம் செய்யக்கோரி தொழிற்சாலை ஊழியர்கள் வேலை நிறுத்தம்; 156 பேர் கைது


பணி நிரந்தரம் செய்யக்கோரி தொழிற்சாலை ஊழியர்கள் வேலை நிறுத்தம்; 156 பேர் கைது
x
தினத்தந்தி 13 Dec 2018 5:30 AM IST (Updated: 13 Dec 2018 5:26 AM IST)
t-max-icont-min-icon

பணி நிரந்தரம் செய்யக்கோரி சேதராப்பட்டில் வேலை நிறுத்த போராட்டத்தின்போது மறியலில் ஈடுபட்ட 156 தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர்.

காலாப்பட்டு,

புதுவை மாநிலம் சேதராப்பட்டு தொழிற்பேட்டையில் சிறிய, பெரிய என 100–க்கும் மேற்பட்ட தனியார் தொழிற்சாலைகள் உள்ளன. இங்கு உள்ளூரை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி வெளிமாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கானவர்கள் வேலை செய்து வருகின்றனர்.

இவர்களில் ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்யவேண்டும், தொழிலாளர் நலநிதி வழங்கவேண்டும், சேதராப்பட்டு சுற்றுப்பகுதியை சேர்ந்த இளைஞர்களுக்கு 60 சதவீதம் வேலைவாய்ப்பு வழங்கவேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை தொழிலாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி சேதராப்பட்டு தொழிற்பேட்டை அனைத்து தொழிலாளர்கள் தொழிற்சங்கங்கள் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் வேலைநிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி நேற்று வேலை நிறுத்தம் நடைபெற்றது. இருப்பினும் காலை 6 மணி ஷிப்ட் வேலைக்கு சில தொழிலாளர்கள் வந்தனர். அவர்களை ஏ.ஐ.சி.டி.யு தொழிற்சங்க நிர்வாகி மோதிலால், நாம் தமிழர் தொழிற்சங்க நிர்வாகி ரமேஷ், பாட்டாளி தொழிற்சங்க நிர்வாகி பாஸ்கர், விடுதலை சிறுத்தை தொழிற்சங்க நிர்வாகி முருகையன் உள்பட பலர் தடுத்து நிறுத்தினர்.

இதுபற்றி தகவல் அறிந்த சேதராப்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்–இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் 50–க்கும் மேற்பட்ட போலீசார் விரைந்து சென்று தொழிலாளர்களை வேலைக்கு செல்ல விடாமல் தடுத்த தொழிற்சங்க நிர்வாகிகள் உள்பட 80 பேரை கைது செய்து, கோரிமேடு போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.

இந்த நிலையில் பாட்டாளி தொழிற்சங்க நிர்வாகி ஜெயபால் மற்றும் ஏராளமான தொழிலாளர்கள் சேதராப்பட்டு மும்முனை சந்திப்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதை அறிந்த சேதராப்பட்டு போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் கலைந்துபோக மறுத்துவிட்டனர்.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 19 பெண்கள் உள்பட 76 பேர் கைது செய்யப்பட்டனர். தொழிலாளர்களை வேலைக்கு செல்ல விடாமல் தடுத்தது மற்றும் சாலைமறியலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட 156 பேரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

வேலை நிறுத்த போராட்டத்தில் அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க பாதுகாப்பு பணியில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.


Next Story