வெள்ளிமலை: பள்ளி விடுதியில் திடீர் தீ விபத்து - மாணவர்களின் உடைமைகள் எரிந்து சேதம்


வெள்ளிமலை: பள்ளி விடுதியில் திடீர் தீ விபத்து - மாணவர்களின் உடைமைகள் எரிந்து சேதம்
x
தினத்தந்தி 14 Dec 2018 3:45 AM IST (Updated: 13 Dec 2018 10:21 PM IST)
t-max-icont-min-icon

வெள்ளிமலையில் உள்ள பள்ளி விடுதியில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் மாணவர்களின் உடைமைகள் எரிந்து சேதமானது.

கச்சிராயப்பாளையம்,

விழுப்புரம் மாவட்டம் கல்வராயன்மலையில் உள்ள வெள்ளிமலை கிராமத்தில் மத்திய அரசின் நிதி உதவி பெறும் ஏகலைவா மலைவாழ் உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் கல்வராயன்மலையை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். நீண்ட தூரத்தில் இருந்து வரும் மாணவர்களின் வசதிக்காக பள்ளி வளாகத்திலேயே விடுதி உள்ளது.

இதில் புதிய கட்டிடத்தில் 300 மாணவர்களும், பழைய கட்டிடத்தில் 24 மாணவர்களும் தங்கியிருந்து பள்ளிக்கூடத்துக்கு சென்று வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று காலை மாணவர்கள் அனைவரும் விடுதியில் சாப்பிட்டு முடித்ததும், பள்ளிக்கூடத்துக்கு சென்றனர். சிறிது நேரத்தில் பழைய விடுதி கட்டிடத்தில் இருந்து அதிகளவில் திடீரென புகை வெளியேறியது. இதையடுத்து ஆசிரியர்கள், அந்த விடுதிக்கு சென்று பார்த்தனர்.

அப்போது மாணவர்களின் உடைமைகள், கட்டில் உள்ளிட்டவை தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள் உடனே தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சேலம் மாவட்டம் கரும்மந்துறை தீயணைப்பு துறை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இருப்பினும் மாணவர்களின் துணிமணிகள், அவர்கள் வைத்திருந்த பொருட்கள், கட்டில்கள் உள்ளிட்டவை முற்றிலும் எரிந்து சேதமானது. மாணவர்கள் விடுதியில் இருந்து பள்ளிக்கூடத்துக்கு சென்றதால் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.

இதற்கிடையே இதுபற்றி தகவல் அறிந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மாவட்ட துணை ஆட்சியர் பிரகாஷ்வேல், பள்ளி விடுதிக்கு வந்து கட்டிடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவருடன் அதிகாரிகள், ஆசிரியர்கள் உடனிருந்தனர். இதுகுறித்து கரியாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி விடுதியில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் வெள்ளிமலை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story