பாலம் கட்ட பள்ளம் தோண்டப்பட்ட பகுதியில் பிரதிபலிப்பான் இல்லாததால் விபத்து ஏற்படும் அபாயம்
உடுமலை–தாராபுரம் சாலையில் காரத்தொழுவு ஊராட்சியில் பாலம் கட்ட தோண்டப்பட்ட பள்ளம் அருகே பிரதிபலிப்பான் இல்லாததால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
மடத்துக்குளம்,
உடுமலை– தாராபுரம் சாலையில் காரத்தொழுவு ஊராட்சி அமைந்துள்ளது. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உடுமலை–தாராபுரம் சாலையில் பங்களாமேடு, முள்ளங்கி வலசு உள்பட 3 இடங்களில் பாலம் கட்டப்பட உள்ளது. இற்காக சாலையின் ஓரத்தில் 6 அடி ஆழமும், 6 அடி நீளமும், 6 அடி அகலமும் கொண்ட பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. இந்த பள்ளம் தார்சாலையை யொட்டி தோண்டப்பட்டுள்ளது. இந்த சாலையின் வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.
ஆனால் இந்த பள்ளத்தை யொட்டி விபத்தை தடுக்கும் விதமாக சற்று தொலையில் பிரதிபலிப்பானோ (ஒளிரும் ஸ்டிக்கரோ) அல்லது ஆபத்தான பள்ளம் உள்ளது, மெதுவாக செல்லவும் என்ற எச்சரிக்கை போர்டோ வைக்கப்படவில்லை. இதனால் இந்த பள்ளத்தில் வாகனங்கள் விழுந்து விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. குறிப்பாக இரவு நேரத்தில் வெளியூரை சேர்ந்தவர்கள் இந்த சாலையில் வாகனங்களில் பயணம் செய்தால் சாலையில் தோண்டிய பள்ளம் இருப்பதை தெரியாமல் அதில் விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
இது குறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது:–
உடுமலை–தாராபுரம் சாலையில் காரத்தொழுவு ஊராட்சியில் 3 இடங்களில் பாலம் அமைக்க பள்ளம் தோண்டப்பட்டு உள்ளது. எனவே ஆபத்தை உணர்ந்து பாலம் கட்டும் பணியை விரைந்து தொடங்க வேண்டும். மேலும் பொக்லைன் எந்திரம் கொண்டு பள்ளம் தோண்டும்போது அந்த வழியாக பங்களாமேடு பகுதிக்கு செல்லும் குடிநீர் குழாய் உடைந்து விட்டது. இதனால் பங்களாமேடு பகுதிக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட வில்லை. எனவே அவர்களுக்கு குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் இந்த சாலை வழியாக தாராபுரம், உடுமலை, பொள்ளாச்சி, மடத்துக்குளம், திருப்பூர் ஆகிய ஊர்களுக்கு ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. எனவே விபத்தை தடுக்கும் விதமாக பள்ளம் தோண்டப்பட்டுள்ள இடத்தின் அருகே ஒளிரும் ஸ்டிக்கர் வைக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.