திருப்பூரில் ரசாயன குடோனில் திடீர் தீ விபத்து; பொருட்கள் வெடித்து சிதறியதால் ஓட்டம் பிடித்த பொதுமக்கள்
திருப்பூரில் ரசாயன குடோனில் தீவிபத்து ஏற்பட்டது. இதில் ரசாயன பொருட்கள் வெடித்து சிதறியதால் பொதுமக்கள் ஓட்டம் பிடித்தனர்.
திருப்பூர்,
திருப்பூர் குமரன்ரோட்டில் உள்ள கூட்டுறவு சங்க கட்டிடத்தின் அருகே கதிர்வேல் என்பவருக்கு சொந்தமான ரசாயன பொருட்கள் குடோன் ஒன்று செயல்பட்டு வந்தது. இதில் பள்ளி, கல்லூரிகளின் ஆய்வகங்களில் பயன்படுத்தப்படும் ரசாயன பொருட்களும், பின்னலாடை நிறுவனங்கள் மற்றும் அதை சார்ந்த துணை நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் ரசாயன பொருட்கள் அங்கு வைத்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று காலையில் திடீரென அந்த குடோனில் இருந்து கரும்புகை வந்துள்ளது.
இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக இதுகுறித்து அதன் உரிமையாளருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும், இதுகுறித்து திருப்பூர் வடக்கு தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின்படி அங்கு, மாவட்ட தீயணைப்பு துறை அதிகாரி கிருஷ்ணமூர்த்தி தலைமையில் உதவி மாவட்ட தீயணைப்பு அதிகாரி வெங்கடரமணன் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் தீயணைப்பு வாகனங்களில் வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்து கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென அந்த குடோனில் இருந்த ரசாயனப்பொருட்கள் வெடித்து சிதறியது. இதனால் தீயை அணைத்து கொண்டிருந்த தீயணைப்பு வீரர்களும், வேடிக்கை பார்க்க கூடியிருந்த பொதுமக்களும் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். பின்னர் மீண்டு தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இருப்பினும் உள்ளே இருந்த ரசாயன பொருட்கள் வெடித்த வண்ணம் தீயின் கோரம் அதிகரித்து கொண்டே இருந்தது. இதையடுத்து நுரையை பீய்ச்சி அடிக்கும் கருவியை கொண்டு தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க முயன்றனர்.
இருப்பினும் தீ அணையவில்லை. இதையடுத்து அருகில் உள்ள ஓட்டல் ஊழியர்களின் உதவியுடன் தீயணைப்பு வீரர்கள் மணலை கொண்டு வந்து அதனுடன் சுண்ணாம்பு பொடியை கலந்து பற்றி எரிந்து கொண்டிருந்த தீயின் மீது போட்டனர். இவ்வாறு சுமார் 3 மணிநேர போராட்டத்திற்கு பின்னர் வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்து அணைத்தனர். இந்த தீவிபத்தால் குடோனில் வைக்கப்பட்டிருந்த பல லட்சம் மதிப்பிலான ரசாயன பொருட்கள் எரிந்து நாசம் ஆனது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும், குடோனில் என்னென்ன ரசாயன பொருட்கள் வைக்கப்பட்டிருந்தது. இவை பாதுகாப்பானவையா? என்பது குறித்து திருப்பூர் வடக்கு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.