கோர்ட்டு உத்தரவை மீறி கோவில் நிலத்தில் பால்பண்ணை கட்டுமான பணிகள்; இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் பரபரப்பு புகார்


கோர்ட்டு உத்தரவை மீறி கோவில் நிலத்தில் பால்பண்ணை கட்டுமான பணிகள்; இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் பரபரப்பு புகார்
x
தினத்தந்தி 15 Dec 2018 5:00 AM IST (Updated: 15 Dec 2018 4:31 AM IST)
t-max-icont-min-icon

ஊதியூர் அருகே கோவில் நிலத்தில் கோர்ட்டு உத்தரவை மீறி பால்பண்ணை கட்டுமானப் பணிகள் நடப்பதாக இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.

காங்கேயம்,

காங்கேயத்தை அடுத்துள்ள ஊதியூர் அருகே குண்டடம் ரோட்டில் 95 ஏக்கர் பரப்பளவில் தனியார் பால் நிறுவனம் ஒன்று பால்பண்ணை கட்டுமான பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலம் முழுவதும் ஊதியூர் உத்தண்ட வேலாயுதசாமி கோவிலுக்கு சொந்தமானது எனக்கூறி இந்து சமய அறநிலையத்துறை சார்பில் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது.

மேலும் கட்டுமான பணிகளை நிறுத்தக்கோரி, இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கட்டுமானப் பணிகளை நிறுத்த தாசில்தார் உத்தரவிட்டார். இதையடுத்து கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டன. அத்துடன் அந்த இடத்திற்கு சிவன்மலை கோவில் நிர்வாகம் சார்பில் பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். மேலும் சம்பந்தப்பட்ட பால் நிறுவனத்தின் காவலாளிகளும் அங்கு இருந்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த 10–ந் தேதி காலை பால்நிறுவன கட்டுமானம் நடைபெறும் இடத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். அதை தொடர்ந்து 100–க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மீண்டும் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுபற்றி போலீஸ் தரப்பில் விசாரித்தபோது ‘‘தாராபுரம் சப்–கலெக்டரிடம் கட்டுமானப் பணிகளை தொடர சம்பந்தப்பட்ட பால் நிறுவனம் அனுமதி பெற்றிருப்பதாக’’ கூறினர். காங்கேயம் தாசில்தார் மகேஸ்வரனும் இதே கருத்தை தெரிவித்தார்.

இந்த நிலையில் கோர்ட்டு உத்தரவை மீறி கோவில் நிலத்தில் போலீஸ் மற்றும் வருவாய்த்துறை உதவியோடு கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதாக சிவன்மலை இந்துசமய அறநிலையத்துறை உதவி ஆணையர் கண்ணதாசன் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி உதவி ஆணையர் கண்ணதாசன் கூறியதாவது:–

பால்பண்ணை கட்டுமானப் பணிகள் நடக்கும் நிலம் முழுவதும் உத்தண்ட வேலாயுதசாமி கோவிலுக்கு சொந்தமானதாகும். இங்கு கட்டுமானப் பணிகள் பற்றிய தகவல் கிடைத்த உடன் நடவடிக்கை மேற்கொண்டு பணிகளை தடுத்து நிறுத்தினோம். அதன் பின்னர் அந்த நிலம் கோவிலுக்கு பாத்தியப்பட்ட நிலம் இல்லை என்று கடந்த பிப்ரவரி மாதம் 2–ந் தேதி தாராபுரம் சப்–கலெக்டர் உத்தரவு பிறப்பித்திருந்தார். அந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் ரிட்மனு தாக்கல் செய்யப்பட்டது.

சப்–கலெக்டர் உத்தரவை, உயர்நீதி மன்றம் ரத்து செய்த நிலையில் பால் நிறுவனத்தினர் மேல்முறையீடு செய்தனர். மேல் முறையீட்டு மனுவும் கடந்த ஜூன் மாதம் 20–ந் தேதி உயர்நீதிமன்றத்தால் டிஸ்மிஸ் செய்யப்பட்டு விட்டது. அவ்வாறு இருக்க நீதிமன்ற உத்தரவை மீறி தனியார் நிறுவனத்தினர் கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுதொடர்பாக மேல் நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதுபற்றி உத்தண்ட வேலாயுதசாமி கோவில் பக்தர்கள் தரப்பில் கூறும்போது, ‘‘ஊதியூரை சுற்றிலும் உத்தண்ட வேலாயுதசாமி கோவிலுக்கு சொந்தமாக நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலம் உள்ளது. அந்த நிலங்களை விவசாயிகள் குத்தகைக்கு எடுத்து அனுபவித்து வருகின்றனர். இதில் சிலர் போலியாக பட்டா தயார் செய்து விற்பனை செய்துள்ளனர். அவ்வாறு விற்பனை செய்யப்பட்ட நிலங்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாரபட்சமின்றி நடவடிக்கை மேற்கொண்டு மீட்க வேண்டும்.

கோவில் நிலத்தில் பால் பண்ணை கட்டுமானப் பணிகள் தொடங்கியவுடன் வரிந்துகட்டிக் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்ட இந்து அமைப்புகள் தற்போது மீண்டும் போலீஸ் பாதுகாப்புடன் பணிகள் தொடங்கப்பட்ட நிலையில் அமைதியாக இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது’’ என்றனர்.

இது தொடர்பாக இந்து முன்னணியின் திருப்பூர் கிழக்கு மாவட்ட தலைவர் தமிழ்ச்செல்வன் கூறும்போது, ‘‘உத்தண்ட வேலாயுதசாமி கோவில் நிலத்தில் சட்டவிரோதமாக கட்டுமானப் பணிகள் நடைபெறுவதாக அறிந்தோம். இதுதொடர்பாக மாநில நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்து வருகிறோம். விரைவில் கட்டுமானப் பணிகளை நிறுத்தக்கோரியும், கோவில் நிலத்திலிருந்து சம்பந்தப்பட்ட நிறுவனத்தை வெளியேற்றவும் வலியுறுத்தி மிகப் பெரிய போராட்டத்தை இந்துமுன்னணி சார்பில் நடத்த உள்ளோம்’’ என்றார்.


Next Story