தாளவாடி அருகே இறந்த யானையின் தந்தங்கள் வெட்டி கடத்தல்; மர்ம நபர்கள் கைவரிசை


தாளவாடி அருகே இறந்த யானையின் தந்தங்கள் வெட்டி கடத்தல்; மர்ம நபர்கள் கைவரிசை
x
தினத்தந்தி 15 Dec 2018 4:38 AM IST (Updated: 15 Dec 2018 4:38 AM IST)
t-max-icont-min-icon

தாளவாடி அருகே இறந்த யானையின் தந்தங்களை மர்ம நபர்கள் வெட்டி கடத்தி உள்ளனர்.

தாளவாடி,

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட பகுதி ஆசனூர் வனச்சரகம். இந்த வனச்சரகத்துக்கு உள்பட்ட அடர்ந்த வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, கரடி, மான், செந்நாய் போன்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன. வனத்துறையினர் அவ்வப்போது வனப்பகுதியில் ரோந்து சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி நேற்று காலை ஆசனூர் வனத்துறையினர் தாளவாடியை அடுத்த தமிழக– கர்நாடக மாநில எல்லையில் உள்ள மூக்கன்பாளையம் என்ற பகுதியில் ரோந்து வந்தனர். அப்போது அங்குள்ள ஒரு பகுதியில் இருந்து துர்நாற்றம் வந்தது. இதனால் வனத்துறையினர் துர்நாற்றம் வந்த பகுதியை நோக்கி சென்றனர். அப்போது அங்கு ஒரு ஆண் யானையின் உடல் அழுகிய நிலையில் கிடந்தது.

உடனே இதுபற்றி வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்ததும் ஈரோடு மாவட்ட வனப்பாதுகாவலர் நாகநாதன், சத்தியமங்கலம் புலிகள் காப்பக இயக்குனர் அருண்லால், ஆசனூர் வனச்சரகர் ராஜலிங்கம், கால்நடை டாக்டர் அசோகன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இறந்து கிடந்த யானையின் உடலை பார்வையிட்டனர். அப்போது யானையின் 2 தந்தங்களில் ஒன்று வெட்டி எடுக்கப்பட்டிருந்தது. மற்றொன்று அப்படியே முழுவதுமாக உருவி எடுக்கப்பட்டிருந்தது. யானையின் தந்தங்களை மர்ம நபர்கள் வெட்டி கடத்தி சென்றது தெரிய வந்தது.

இதைத்தொடர்ந்து ஈரோட்டில் இருந்து மோப்ப நாய் வீரா வரவழைக்கப்பட்டது. அந்த நாய் அங்கிருந்து மோப்பம் பிடித்தபடி 2 கிலோ மீட்டர் தூரம் ஓடி கர்நாடக மாநிலத்தில் உள்ள மூக்கன்பாளையம் கிராமத்துக்கு சென்றது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. இதையடுத்து யானையின் உடல் அங்கேயே பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் வனவிலங்குகளுக்கு உணவாக யானையின் உடல் அங்கேயே விடப்பட்டது.

இதுபற்றி கால்நடை டாக்டர் அசோகன் கூறுகையில், ‘இறந்து கிடந்த ஆண் யானைக்கு 20 வயது இருக்கும். இறந்து 4 அல்லது 5 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது,’ என்றார்.

மேலும் இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், ‘வயது முதிர்வு காரணமாக இந்த யானை இறந்ததா? அல்லது தந்தங்களுக்காக யாராவது யானையை வேட்டையாடி கொன்றார்களா?’ என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்` என்றார்.


Next Story