மதுரை ஐகோர்ட்டு உத்தரவின்படி ராமேசுவரம் கோவிலில் 1–வது தீர்த்தம் இடமாற்றம்; பக்தர்கள் புனித நீராடினர்
மதுரை ஐகோர்ட்டு உத்தரவின்படி ராமேசுவரம் கோவிலில் 1–வது தீர்த்தம் நேற்று இடமாற்றம் செய்யப்பட்டது. அங்கு பக்தர்கள் புனித நீராடினர்.
ராமேசுவரம்,
ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலுக்கு தமிழகம் மட்டும் அல்லாது, பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இவ்வாறு கோவிலுக்கு வரும் பக்தர்கள் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடியபின் கோவிலுக்கு உட்புறமுள்ள 22 தீர்த்தங்களிலும் நீராடிவிட்டு சாமி தரிசனம் செய்வது வழக்கம்.
தீர்த்த கிணறுகளில் நீராடும் பக்தர்கள் ஈரமான ஆடைகளுடன் சாமி தரிசனம் செய்ய செல்வதால் பிரகாரங்கள் முழுவதும் தண்ணீருடன் காட்சி அளிக்கும். முக்கிய அமாவாசை தினங்கள் மற்றும் விழாக்காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வருவார்கள். அப்போது குறுகலான இடத்தில் அமைந்த 1–வது தீர்த்தமான மகாலட்சுமி தீர்த்தம் உள்பட 6 தீர்த்தங்களில் இடநெருக்கடி காரணமாக பக்தர்கள் நீராடுவதற்கு அனுமதிக்கப்படாத நிலை இருந்து வந்தது.
இந்தநிலையில் ராமேசுவரம் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைத்து தீர்த்தங்களிலும் புனித நீராட ஏற்பாடு செய்ய வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
அதன்படி கோவிலின் வடக்கு பகுதியில் புதிதாக 6 தீர்த்தக்கிணறுகள் தோண்டப்பட்டன. அதனை தொடர்ந்து கடந்த மாதம் 2 முதல் 6 வரையிலான தீர்த்தக்கிணறுகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு பக்தர்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டன.
1–வது தீர்த்தமான மகாலட்சுமி தீர்த்தத்தை இடமாற்றம் செய்ய எதிர்ப்பு ஏற்பட்டதால் அப்போது அந்த தீர்த்தம் மட்டும் மாற்றம் செய்யப்படாமல் இருந்தது. ஆனால் அதனையும் உடனடியாக இடமாற்ற ஐகோர்ட்டு உத்தரவிட்டதை தொடர்ந்து அதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.
அதன்படி நேற்று புதிய தீர்த்தத்துக்கு அம்மன் சன்னதி மண்டபத்தில் யாகசாலை பூஜைகள் நடந்தன. 11 கலசங்களில் புனித நீர் நிரப்பப்பட்டு, வேதமந்திரங்கள் முழங்க யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. புனித நீர் கலசங்கள் எடுத்து வரப்பட்டு கோவிலின் 3–ம் பிரகாரத்தை வலம் வந்தது. அதனை தொடர்ந்து 2–ம் பிரகாரத்தில் வடக்கு பகுதியில் புதிதாக தோண்டப்பட்ட தீர்த்தக்கிணற்றில் புனித நீர் ஊற்றப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது.
பின்னர் மகாலட்சுமி தீர்த்தத்துக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கோவில் இணை ஆணையர் மங்கையர்க்கரசி, உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகனன், சூப்பிரண்டு ககாரின்ராஜ், பேஸ்கார்கள் அண்ணாதுரை, கலைச்செல்வன், கமலநாதன், கண்ணன் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் திலகராணி, செந்தில்குமார் மற்றும் போலீசார் மேற்கொண்டனர்.
இதுகுறித்து கோவில் இணை ஆணையர் மங்கையர்க்கரசி கூறியதாவது:–
மதுரை ஐகோர்ட்டு உத்தரவின்படி ராமேசுவரம் கோவிலின் தீர்த்தக்கிணறுகள் பக்தர்கள் வசதிக்கு ஏற்ப இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளது. தற்போது 1–வது தீர்த்தமான மகாலட்சுமி தீர்த்தமும் இடமாற்றம் செய்யப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து தீர்த்தமாடும் பக்தர்கள் வடக்கு கோபுரம் வழியாக உள்ளே சென்று புனித நீராடிவிட்டு, பின்னர் அதே வழியில் செல்லும்படி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தரிசனத்துக்கு செல்பவர்கள் கிழக்குவாசல் வழியாக அனுமதிக்கப்படுவார்கள். கிழக்கு வாசலில் இருந்த டிக்கெட் கவுண்ட்டர்கள் வடக்கு வாசல் பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதேபோல கோவிலின் 22–வது தீர்த்தமான கோடி தீர்த்தத்திலும் பக்தர்கள் நீராடும் இடம் வடக்கு பகுதிக்கு மாற்றப்பட்டு உள்ளது. நேற்று புதிய தீர்த்த கிணறுகளில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடிவிட்டு சாமி தரிசனம் செய்தனர். பல ஆண்டு காலமாக கிழக்கு வாசல் வழியாக சென்ற பக்தர்கள், தற்போதைய புதிய ஏற்பாட்டின் மூலம் வடக்கு வாசல் வழியாக சென்றுவருவது குறிப்பிடத்தக்கது.