“இளைஞர்கள் முகநூல், டுவிட்டரில் மூழ்குவது வேதனை தருகிறது” வைகோ பேச்சு


“இளைஞர்கள் முகநூல், டுவிட்டரில் மூழ்குவது வேதனை தருகிறது” வைகோ பேச்சு
x
தினத்தந்தி 15 Dec 2018 12:00 AM GMT (Updated: 14 Dec 2018 11:50 PM GMT)

இளைஞர்கள் முகநூல், டுவிட்டரில் மூழ்குவது வேதனை தருவதாக ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ கூறினார்.

திருப்பரங்குன்றம்,

மதுரை பசுமலையில் உள்ள மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியும், மதுரை காமராஜர் பல்கலைகழகமும் இணைந்து ‘‘கவிப்பேரரசு வைரமுத்து படைப்புகள்‘‘ எனும் சொற்பொழிவை நடத்தின. கல்லூரியில் நடந்த இந்த நிகழ்ச்சிக்கு முதல்வர் நேரு தலைமை தாங்கினார். கல்லூரி தலைவர் ராஜகோபால், பொருளாளர் கோவிந்தராஜன், சுயநிதி பிரிவு இயக்குனர் ராஜா கோவிந்தசாமி, துணை செயலாளர் ராஜேந்திர பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் சிறப்பு விருந்தினராக ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டு, கவிப்பேரரசு வைரமுத்து படைப்புகள் என்ற தலைப்பில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

நான் படிக்கும் போது இளைஞர்கள், மாணவர்களிடம் மொழிப்பற்று, தேசபற்று கொண்ட சிந்தனை இருந்தது. ஆனால் தற்போது அதை பற்றிய சிந்தனை இல்லை. இளம் தலைமுறையினர் முகநூல், டுவிட்டரில் மூழ்கிவிட்டது வேதனை தருகிறது. இளைஞர்கள் நாட்டை காப்பாற்ற வேண்டும்.

உலகில் முதல் மொழி நம் தாய் மொழி தமிழ். இளைஞர்கள் தமிழ் மொழியை காப்பாற்றிட வேண்டும். வைரமுத்துவின் படைப்புகளின் கருத்துக்களை பின்பற்றினால் வாழ்வில் வெற்றி பெறலாம்.

இவ்வாறு அவர் பேசினார். முடிவில் தமிழ் துறை உதவி பேராசிரியர் குமரகுருபரன் நன்றி கூறினார்.

அதை தொடர்ந்து வைகோ நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–

ரிசர்வ் வங்கியின் ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் கோடியை மத்திய அரசு வாங்க நினைக்கிறது. ரிசர்வ் வங்கி நாட்டின் கருவூலம். நாட்டை காக்கும் கருவூலத்தில் கை வைக்க திட்டமிட்டுள்ளனர். அகில இந்திய அளவில் உள்ள பெரிய கட்சிகள் உடனடியாக சுப்ரீம் கோர்ட்டுக்கு செல்ல வேண்டும். ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்ததாஸை பதவியில் இருந்து வெளியேற்ற வேண்டும். அப்போதுதான் இந்த நாட்டை காப்பாற்ற முடியும்.

தமிழகத்தில் காலியாக உள்ள 20 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வருகிறது. அதில் 18 தொகுதியில் தி.மு.க. வெற்றி பெறும். 20 தொகுதியில் 15 தொகுதி வெற்றி பெற்றாலே பொதுத்தேர்தல் வராமல் தி.மு.க. ஆட்சிக்கு வரும். மத்தியில் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும். 2019–ல் தமிழ்நாடு மற்றும் இந்தியாவிற்கு விடிவு காலம் பிறக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story