இந்திய மீனவர்கள் எல்லை தாண்டுவதை தடுக்க செயற்கைகோள் ஏவப்படும்; விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தகவல்


இந்திய மீனவர்கள் எல்லை தாண்டுவதை தடுக்க செயற்கைகோள் ஏவப்படும்; விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தகவல்
x
தினத்தந்தி 15 Dec 2018 12:10 AM GMT (Updated: 15 Dec 2018 12:10 AM GMT)

இந்திய மீனவர்களின் எதிர்கால நலன் கருதி ஆழ்கடலில் மீன்வளத்தை கண்டறியவும், மீனவர்கள் எல்லை தாண்டுவதை தடுக்கவும் புதிய செயற்கைகோள் விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார்.

புதுச்சேரி,

புதுவை மாநிலம் வில்லியனூர் அருகே ஊசுடு அகரத்தில் உள்ள ஸ்ரீபாரத் வித்யாஸ்ரம் பள்ளியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியை இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தொடங்கிவைத்து பேசியதாவது:–

மாணவர்கள் சிறு வயதிலேயே தான் என்ன ஆகப்போகிறோம் என்று முடிவு செய்ய வேண்டும். சாதாரண பூங்காவில் வெட்டுக்கிளி, பட்டாம்பூச்சி, மான் மற்றும் தேனீக்கள் இருப்தை பார்த்து இருப்பீர்கள். இங்கு அமைய உள்ள அறிவியல் பூங்காவில் நீங்கள் தேனீக்களாக இருந்தால்தான் அறிவியலில் சாதனை படைக்க முடியும்.

அமெரிக்கா, ரஷ்யா, சீனா, ஜப்பான் போன்ற நாடுகள் செவ்வாய் கிரகத்துக்கு விண்கலம் செலுத்த முயற்சி செய்தபோது அமெரிக்கா 5 முறையும், ரஷ்யா 10 முறையும் தோல்வியடைந்த பின் விண்ணில் செலுத்தியது. ஆனால் இந்தியா மங்கல்யான் விண்கலத்தை செவ்வாய் கிரகத்துக்கு ஒரே முயற்சியில் செலுத்தியது. இந்த திட்டத்தில் ரஷ்யா, அமெரிக்கா போன்ற நாடுகளை இந்தியா பின்னுக்கு தள்ளியது.

மாணவர்களாகிய நீங்கள், இந்த பகுதியில் அமைய உள்ள அறிவியல் பூங்காவை நல்ல முறையில் பயன்படுத்தி நாட்டுக்கும், வீட்டுக்கும், தங்களுக்கும் நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். நான் போதிய வசதி இல்லாத காலத்தில் படித்து செவ்வாய்க்கும், சந்திரனுக்கும் விண்கலம் அனுப்பினேன். தற்போது தரமான கல்வி கிடைப்பதால் நீங்கள் நன்கு படித்து சூரியனுக்கே விண்கலம் அனுப்ப வேண்டும்.

இந்திய மீனவர்களின் நலன் கருதி ஆழ்கடலில் மீன்வளத்தை கண்டறியவும், மீனவர்கள் எல்லை தாண்டுவதை எச்சரித்து தடுக்கவும் புதிய செயற்கைகோள் விரைவில் விண்ணில் ஏவப்பட உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story