‘மனித உரிமை காக்கும் கட்சி’ நடிகர் கார்த்திக் புதிய கட்சி-கொடி அறிமுகம்
‘மனித உரிமை காக்கும் கட்சி’ என்ற புதிய கட்சியை தொடங்குவதாக நெல்லையில் நேற்று நடிகர் கார்த்திக் அறிவித்தார்.
நெல்லை,
நடிகர் கார்த்திக் நாடாளும் மக்கள் கட்சியை தொடங்கி செயல்படுத்தி வந்தார். இந்த நிலையில் அவர் நேற்று நெல்லைக்கு வந்தார். நெல்லை புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள ஒரு ஓட்டலில் அவர் புதிய கட்சியை அறிமுகம் செய்யும் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
‘மக்கள் உரிமை காக்கும் கட்சி’ என்ற புதிய கட்சியை தொடங்குவதாக நடிகர் கார்த்திக் அறிவித்து, அதற்கான கொடியையும் அறிமுகம் செய்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கடந்த 2016-ம் ஆண்டுக்கு பிறகு நாடாளும் மக்கள் கட்சி செயல்படவில்லை. அந்த கட்சியை கலைத்து விட்டு தற்போது மக்கள் உரிமைகளை வென்றெடுக்க ‘மக்கள் உரிமை காக்கும் கட்சி‘ என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கப்பட்டு உள்ளது. இந்த கட்சியை விரைவில் டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய உள்ளேன். அதன் பிறகு அம்பையில் மிகப்பெரிய பொதுக்கூட்டம் நடத்தப்படும். அப்போது தமிழக மற்றும் இந்திய அரசியல் குறித்து பேசுவேன். சுதந்திர இந்தியாவில் மனித உரிமைகளை போராடி பெற வேண்டி உள்ளது. எனவே கட்சிக்கு இத்தகைய பெயர் சூட்டப்பட்டு உள்ளது. அரசியலில் சிறிது இடைவெளி ஏற்பட்டு விட்டது. இனி அரசியலைவிட்டு ஒருபோதும் போகமாட்டேன்.வருகிற தேர்தல்களில் கண்டிப்பாக போட்டியிடுவோம். தனித்து போட்டியா?, கூட்டணி அமைத்து போட்டியா? என்பது தேர்தலின் போது அறிவிக்கப்படும்.
தமிழகத்தில் மத்திய அரசின் கைப்பாவையாக அ.தி.மு.க. அரசு செயல்பட்டு வருகிறது. அனைவரும் மத்திய, மாநில அரசுகளை குறை கூறுவதன் மூலம் இந்த அரசுகள் சரியாக செயல்படவில்லை என்பது உறுதியாகிறது.
ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டு உள்ளது. இதற்கு எதிராக நாம் போராட வேண்டும். ஏற்கனவே இந்த போராட்டத்துக்கு 13 பேரின் உயிர்களை இழந்து விட்டோம். இனிமேல் போராட்டத்தினால் மனித உயிர்களை இழக்க கூடாது. மக்கள் உரிமை காக்கும் கட்சி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடும்.
இவ்வாறு நடிகர் கார்த்திக் கூறினார்.
Related Tags :
Next Story