மக்கள் ஆதரவுள்ள இயக்கம் அ.தி.மு.க. எடப்பாடி பழனிசாமி பேச்சு
மக்கள் ஆதரவுள்ள இயக்கம் அ.தி.மு.க.தான் என எடப்பாடி பழனிசாமி கூறினார்.
தம்மம்பட்டி,
சேலம் மாவட்டம் தம்மம்பட்டி அருகே செந்தாரப்பட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு பேசினார். முன்னதாக அவருக்கு மாவட்ட விவசாய அணி தலைவர் துரை ரமேஷ் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் மாநில கூட்டுறவு வங்கியின் முன்னாள் தலைவரும், சேலம் புறநகர் ஜெயலலிதா பேரவை செயலாளருமான இளங்கோவன், நாடாளுமன்ற உறுப்பினர் காமராஜ், எம்.எல்.ஏ.க்கள் மருதமுத்து, செம்மலை, மனோன்மணி, வெங்கடாசலம் மற்றும் செந்தாரப்பட்டி பேரூராட்சி முன்னாள் தலைவர் மாலினி ரமேஷ், முத்துவேல், ராஜி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:- எதிர்க்கட்சியினர் இந்த ஆட்சி கலைந்து விடும் என போட்ட திட்டம் எதுவும் நிறைவேற வில்லை. அந்த கணக்கு தப்பு கணக்கு என இப்போதுதான் நினைக்கிறார்கள். ஏனெனில் மக்கள் ஆதரவுள்ள இயக்கம் அ.தி.மு.க.தான். மக்கள் ஆதரவுடன் நடைபெறும் கட்சி அ.தி.மு.க. கட்சி. இது உங்கள் கட்சி. அந்த காலகட்டத்தில் மத்திய ஆட்சியில் தமிழகத்தில் திராவிட முன்னேற்ற கழகத்துக்கு கூட்டணி வாய்ப்பு கிடைத்தது.
அப்போது தங்கள் குடும்பத்தை பற்றி நினைத்தார்களே தவிர மக்களை பற்றி சிந்திக்கவே இல்லை. சிந்தித்து இருந்தால் நதிநீர் பிரச்சினையை தீர்த்து இருக்கலாம். ஏழை, எளியோருக்காக பாடுபடுகின்ற அரசு ஜெயலலிதாவின் இந்த அரசு. இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.
தொடர்ந்து அவர் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.
Related Tags :
Next Story